Jun 19, 2014

உணவு பாதுகாப்பு சட்டத்தில் காலத்திற்கேற்ப திருத்தம்: மத்திய அரசிடம் வணிகர்கள் எதிர்பார்ப்பு

வெளிநாட்டு விதிமுறைகளை காப்பியடித்து கொண்டு வரப்பட்டுள்ள, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில், மத்தியில் புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு, காலத்திற்கேற்ற திருத்தங்களை செய்ய வேண்டும் என, உணவு சார்ந்த வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யும் வகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் - 2006ஐ, மத்திய அரசு கொண்டு வந்தது.
பதிவுச்சான்று:
விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 20011ல் அமலுக்கு வந்தது. ஆண்டு வர்த்தகம், 12 லட்சம் ரூபாய்க்குள் செய்வோர், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுச்சான்று பெற வேண்டும். அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர், 2,000 ரூபாய் செலுத்தி, உரிமம் பெற வேண்டும். சான்று, உரிமம் பெறாவிட்டாலும், நிர்ணயித்த தரத்தின்படி பொருட்கள் இல்லாவிட்டாலும், ஒரு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
எதிர்ப்புகள்:
இதற்கு, வணிகர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின. பதிவு, உரிமம் பெற, காங்கிரஸ் அரசு, மூன்று முறை, கால நீட்டிப்பு அளித்தது. இந்த அவகாசம், ஆக., 8ல் முடிய உள்ளது. இந்நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு, உணவு பாதுகாப்பு சட்டத்தில், காலத்திற்கேற்ப திருத்தம் செய்ய வேண்டும் என, வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், டில்லியில், மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனையும் சந்தித்து, வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, சங்கத் தலைவர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது: உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம், 1954 காலத்தை ஒப்பிட்டு, வெளிநாட்டு சட்டங்களை காப்பி எடுத்து போடப்பட்டுள்ளது. அப்போது இயற்கை விவசாயம் நடந்தது.
தரம் மாறுபடும்:
தற்போது, தண்ணீர் இல்லை; குறுகிய கால பயிர்கள், உரம் போட்டு விளைவிக்கப்படுவதால், அந்தக்காலம் போன்று, பொருளின் தரம் இருக்காது. மண்ணின் தன்மைக்கேற்ப தரம் மாறுபடும். விதிகளில் காலத்திற்கேற்ப திருத்தம் வேண்டும்; இல்லையேல், தமிழகத்தில், 50 லட்சம், நாடு முழுவதும், 20 கோடி உணவு சார்ந்த வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என, எடுத்துரைத்தோம். இதை, ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், விதிகளை நன்கு ஆய்வு செய்து, தேவையான திருத்தம் செய்வதாக உறுதி அளித்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment