விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், கார்பைடு கல்லால், செயற்கையாக பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கி உண்போர் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக்குறைவால் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் மாந்தோப்பு அதிகம் உள்ளன. இதில், சப்பட்டா, பஞ்சவர்ணம், கல்லாமை, பாலாமணி, வனாசா, சொரணரேகை உட்பட பல்வேறு மாம்பழங்கள் விளைகின்றன. தற்போது, சீசன் நேரம் என்பதால், மாம்பழ விளைச்சல் அதிகம் உள்ளது. இதை குத்தகைக்கு எடுக்கும் ஏலதாரர்கள், மாங்காயை பறித்து கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதை வாங்கி செல்லும் மொத்த விற்பனையாளர்கள், குடோன்களில் சாதாரண நிலையில் வைக்கோலால் மூடி, மாங்காயை பழுக்க வைக்க வேண்டும். இதில், பழுக்க, கால தாமதம் ஏற்படுவதால், சில வியாபாரிகள், கார்பைடு கல் வைத்து, மாங்காய்களை பழுக்க வைக்கின்றனர்.
கண்ணுக்கு பளிச்சென்று தெரியும் இந்த மாம்பழங்களை வாங்கி உண்ணும் குழந்தைகள், முதியோர் வயிற்று போக்கு உள்ளிட்ட உடல்நலக்குறைபாடால் அவதிப்படுகின்றனர். செயற்கையாக, கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகளில் அமோகமாக விற்கப்படுகிறது. இதை, உணவு கட்டுப்பாடு அதிகாரிகள், நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து,பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. விருதுநகர் ஜெயக்குமார்,"" கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடும் குழந்தைகள் வயிற்று போக்கால் அவதிப்படுகின்றனர். இது போன்ற மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதுடன், அதை விற்போருக்கு கூடுதல் அபராதம் விதித்து, விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment