திருவண்ணாமலை, மே 29:
திருவண்ணாமலையில் கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்களை நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மார்க்கெட் வீதி, தேரடி வீதி, ஆனைக்கட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்கடைகளில் கார்ப்பைட் கல் மூலம் பழுக்கவைத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதைத்தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அழகுராஜ் தலைமையில் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் கலேஷ்குமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலசபாக்கம் கணேஷ்குமார், கீழ்பென்னாத்தூர் வீரமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாம்பழ கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ஆணைக் கட்டி தெருவில் உள்ள ஒரு பழ கடையில் கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைத்த சுமார் ஒன்றரை டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தேரடி வீதியில் உள்ள ஒரு பழக்கடையில் அரை டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
விஷத்தன்மை கொண்ட கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப் படும் மாம்பழங்களை சாப்பிடுவதால், வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். எனவே, கார்ப்பைட் கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அழகுராஜ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment