'கால்சியம் கார்பைடு' கற்கள் மூலம், செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழத்தால், உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படுவதோடு, புற்றுநோய் ஆபத்தும் உண்டு என, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் லட்சுமி நாராயணன் எச்சரித்து உள்ளார்.
தற்போது, மாம்பழ சீசன் துவங்கி விட்டது. தமிழகம் முழுவதும், பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. இயற்கையாக பழுக்க, இரண்டு வாரம் வரை ஆகும் என்பதால், அதுவரை காத்திராமல், 'கால்சியம் கார்பைடு' என்ற வேதிக்கல் உதவியுடன், செயற்கையாக பழுக்க வைத்து, பணம் பண்ணவே, பெரும்பாலான வியாபாரிகள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் லட்சுமி நாராயணன் கூறியதாவது: மாம்பழம் இயற்கையாக பழுக்க, 12 முதல் 15 நாட்கள் ஆகும். செயற்கையாக பழுக்க வைக்க, இரண்டு நாட்களே போதும். இதற்காக, தடையை மீறி, வியாபாரிகள், 'கால்சியம் கார்பைடு' கற்களை, பழக்கூடையின் கீழே வைக்கின்றனர். இக்கற்களில் இருந்து, 'அசிட்டிலீன்' வாயு வெளியேறுகிறது. இதனால், காய்கள் சீக்கிரம் பழமானது போல் காட்சி அளிக்கின்றன. ஆனால், பழத்தின் நீர் சத்து உறிஞ்சப்பட்டு, உள்ளே வறட்சியாக காணப்படும். இதை சாப்பிடுவதால், வயிற்றுப் போக்கு, வாந்தி, தீராத தலைவலி, மயக்கம் வரும். தொடர்ந்து சாப்பிடுவதால், பெரும் சிக்கல் ஏற்படும். 'கால்சியம் கார்பைடு' கற்களில் இருந்து, புற்றுநோயை உருவாக்கும், 'ஆர்சனிக்' என்ற வேதிப்பொருள் பழத்தைச் சுற்றி படர்ந்து விடும். இதை சாப்பிடுவதால், புற்றுநோய் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. செயற்கையாக பழுத்ததில், பழத்தை சுற்றி, சாம்பல் படர்ந்திருக்கும்; கரும் புள்ளிகள் இருக்கும். வெளியில் பழுத்தது போலவும், உள்ளே காயாகவும் இருக்கும். இயற்கையாக பழுத்த பழங்களில், இதுபோன்ற நிலை இருக்காது. குறைந்த விலையில் கிடைக்கிறது என, இவற்றை வாங்கி சாப்பிடாமல், பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மேலும், வியாபாரிகளுக்கு, இதை வலியுறுத்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
2 டன் பழங்கள் பறிமுதல்:
சென்னையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மூன்று குழுக்களாக பிரிந்து, சென்னை கோயம்பேடு, தி.நகர், கொத்தவால்சாவடி மார்க்கெட்களில், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 'கார்பைடு கற்கள்' வைத்து பழுக்க வைக்கப்பட்ட, இரண்டு டன் மாம்பழம், அன்னாசி உள்ளிட்ட பழங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இவை, கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன. வியாபாரிகள் எதிர்ப்பு: கோயம்பேடு பழ மார்க்கெட்டில், அதிகாரிகள் திடீர் சோதனை செய்தபோது, பழங்களை பறிமுதல் செய்ய, வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'எங்களுக்கு, அரசு மாற்று வழியை உருவாக்க வேண்டும்; மார்க்கெட் பகுதியில், பழங்களை பழுக்க வைக்கும் கிடங்குகள் அமைத்துத் தர வேண்டும்' என, கேட்டனர். 'அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் சமாளித்தனர்.
வரவேற்கத்தக்க நடவடிக்கை
ReplyDelete