Apr 30, 2014

கோயம்பேடு, பாரிமுனையில் கார்பைடு கற்களில் பழுக்க வைத்த 1 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல்-வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு


சென்னை, ஏப். 30: 
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமையில் 10க்கு மேற்பட்ட அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கால்சியம் கார்பைடு கல்கள் மூலம் பழுக்க வைத்த 
60 ஆயிரம் மதிப்புள்ள மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பழங்களை குப்பை கிடங் கில் கொட்டி அழித்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 
வியாபாரிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்தனர். அப்போது, இந்த மார்க்கெட்டில் 500 பழக்கடைகள் உள்ளன. தினமும் 2 டன் மாம்பழம் விற்பனை ஆகிறது. லாரியில் பழங்களை கொண்டு வரும்போதே கார்பைடு கற்களை வைத்து, கொண்டு வரப்படுகிறது. இதனால், மாம்பழம் வரும் வழியிலேயே பழுத்து விடுகிறது. மரத்திலேயே பழுக்க வைத்து அந்த பழங்களை விற்பனைக்கு கொண்டு வருவது என்பது முடியாத காரியம். 
அதிகாரிகள், திடீர் திடீரென பழங்களை பறிமுதல் செய்ய வருகிறீர்கள். இயற்கையாக பழங்களை பழுக்க செய்ய சேம்பர் அமைத்து கொடுங்கள். நாங்கள் அதில் பழுக்க வைக்கிறோம். சுமார் 10 கடைகளில் உள்ள பழங்களை பறிமுதல் செய்து, விளம்பரம் தேடுகிறீர்கள். மார்க்கெட்டில் உள்ள 500 கடைகளில் உள்ள பழங்களையும் உங்களால், பறிமுதல் செய்ய முடியுமா?. 
உடனடியாக பழுக்க வைக்க தமிழக அரசு எங்களுக்கு தேவையான, சேம்பர் அமைத்து கொடுக்க வேண்டும். இதுபோல் வந்து எங்களை நஷ்டம் அடைய செய்யாதீர்கள். நீங்கள் பத்திரிகைகளை அழைத்து வந்து, விளம்பரம் தேடி கொள்கிறீர்கள். எங்களுக்கு பழங்களை எப்படி விற்கவேண்டும் என சொல்லி கொடுங்கள் என்றனர். 
அதிகாரிகள் கூறுகையில், கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த பழங்கள் வெள்ளை பவுடர் பூசியதுபோல இருக்கும். பழத்தின் மேல் பாகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும். இந்த பழங்களை சாப்பிட் டால் உடல் நலம் கெடும். எனவே இந்த பழங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றனர். 
மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு அலுவலர்கள் துண்டு பிரசுரம் வழங்கினர். அதில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிட்டால் அஜீரண கோளாறு, தலைவலி, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் போன்றவை வரும். புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது. 
* பாரிமுனை தம்புசெட்டி தெரு, கிடங்கு தெரு, அரண்மனைக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் மாம்பழங்களை கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி லட்சுமி நாராயணனுக்கு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில், ஆய்வாளர்கள் ஜெயகோபல், சிவசங்கரன், இளங்கோ ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 24 குடோன்களில் நடத்திய சோதனையில் 13 குடோன்களில் கார்பைடு கற்கள் மூலம் மாம்பங்களை பழுக்க செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து 
40 ஆயிரம் மதிப் புள்ள 1 டன் மாம்பழங் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
இதேபோல் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு பெட்டியில் சென்ட் ரல் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது, 22 அட்டை பெட்டிகளில் 1.4 டன் எடையுள்ள பான்பராக், குட்கா பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள், குட்கா பொருட்களை லாரி மூலம் கொண்டு சென்று, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் ராட்சத பள்ளம் தோண்டி, அதில் அவற்றை கொட்டி அழித்தனர்.

வணிகர்களுக்கு எச்சரிக்கை 
சென்னை, ஏப். 30: 
உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாக துறை விடுத்துள்ள அறிக்கை: 
கோயம்பேடு காய்கனி அங்காடிகளுக்கு மாம்பழம், அன்னாசி, பப்பாளி போன்ற பழ வகைகள் வந்த வண்ணம் உள்ளன. ஆகையால் கோயம்பேடு காய்கனி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் மாம்பழம், அன்னாசி, பப்பாளி பழவகைகளை வெகுவிரைவில் விற்பனை செய்யும் நோக்கில் செயற்கை முறையில், அதாவது தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ, செயற்கை வேதி பொருட்களை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய கூடாது. செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை சாப்பிடும், பொது மக்களுக்கு உணவுபாதை அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலியும், மயக்கமும், வாந்தி வயிற்று போக்கு, தலை சுற்றல் மற்றும் புற்று நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே செயற்கை முறையில் பழுக்க வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment