சென்னை, ஜன.9:
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் புதைக்கப்பட்ட புகையிலை பொருட்களை, சிலர் தோண்டி எடுத்து மீண்டும் கடைகளில் விற்பனை செய்து வருவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட பான்பராக், ஹன்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை, சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க, தமிழக அரசின் சுகாதார துறையும், உணவு பாதுகாப்பு துறையும் அதிரடி நடவடிக்கை எடுத்து, பதுக்கி வைத்து விற்பனை செய்ய இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடந்த 6 மாதங்களாக, சென்னையின் பல்வேறு பகுதியில் நடத்திய சோதனையில், கடைகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரகசியமாக கொண்டு வந்து குடோன்களில் பதுக்கி வைத்திருந்த டன் கணக்கான குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இந்த குட்கா பொருட்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்கில், பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி, அதில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்படும் குட்கா பொருட்களையும் அங்குள்ள பள்ளத்தில் கொட்டி அழித்து வருகின்றனர்.
இந்நிலையில், குப்பை கிடங்கில் குட்கா பொருட்களை அதிகாரிகள் புதைத்து விட்டு சென்றபிறகு, அங்கு வரும் சிலர், பள்ளங்களை தோண்டி, புதைக்கப்பட்ட குட்கா பொருட்களை வெளியே எடுத்து, சுத்தப்படுத்தி, வேறு பாக்கெட்டுகளில் அடைத்து, மீண்டும் கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர். இதில், கொள்ளை லாபம் கிடைப்பதால், தொடர்ந்து இதை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பள்ளங்களில் இருந்து இரவு நேரங்களில் தோண்டி எடுக்கப்படும் குட்கா பொருட்களை சாலையில் கொட்டி வைத்து, பின்னர், அதிகாலை வேளையில் அவற்றை சரக்கு ஆட்டோக்கள் மூலம் கொண்டு செல்கின்றனர். இதற்காக, தனித்தனியாக ஆட்களை நியமித்து செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில் போலீசார் இந்த பகுதியில் ரோந்து சென்றாலும், இதனை கண்டும் காணாமல் சென்றுவிடுகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு நோய்களை பரப்பும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் வெளியாட்கள் நுழையாத படி, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்� என்றார்.
கொடுங்கையூர் குப்பை கிடங்கு எதிரே தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ள குட்கா பொருட்கள்.
No comments:
Post a Comment