Dec 2, 2013

சுகாதாரமற்ற மீன் விற்பனை அதிகாரி எச்சரிக்கை

கோபி,டிச.2:
கோபி அருகே உள்ள மொடச்சூர் வாரச்சந்தை பகுதியில் சுகாதாரமற்ற முறையில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களுக்கு உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
கோபி அருகே உள்ள மொடச்சூர் வாரச்சந்தை பகுதியில் வாரம் தோறும் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்கள் மீன் விற்பனை செய்து வருகின்றனர்.
மீன் விற்பனை செய்யப்படும் இடங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உரிய உரிமம் இல்லாமல் இருப்பதாகவும் உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந் தது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மனேகரன், முருகேசன், கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மொடச்சூர் சந்தை கடை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அனைத்து மீன் கடைகளிலும், கழிவுகள் தேங்கி சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும் கடைக்காரர்களிடம் நடத்திய விசாரணையில் கடை வைப்பதற்கான உரிமம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பயன்படுத்திய எடை கற்கள் உரிய எடை அளவில் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் உரிமம் பெற வேண்டும் எனவும் அதன் பிறகே கடை வைக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment