Nov 21, 2013

மாவட்டத்தில் இனி இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் - மீறினால் கடைக்கு சீல்



ஊட்டி,நவ.21:
மாவட்டத்தில் உள்ள இறைச்சி மற்றும் மீன்கடைகளில் கண்டிப்பாக குளிர் சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்யவேண்டும். தவறும்பட்சத்தில்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மலை மாவட்டம் என்பதால், சமவெளிப் பகுதிகளை காட்டிலும் சீதோஷ்ண நிலையில் சற்று வேறுபாடு இருக்கும்.சாதாரணமாக சமவெளிப் பகுதிகளில் நிலவும் வெப்ப நிலையை காட்டிலும் பல மடங்கு குறைந்து காணப்படும். இதனால், காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவை எளிதாக கெட்டு போவதில்லை.
இதனால், பெரும்பாலான இறைச்சி கடைகளில் காலையில் வெட்டும் ஆடு, மாட்டிறைச்சி மற்றும் கோழிகளை மாலை நேரம் வரை கடைகளின் முன் பகுதியில் தொங்க விட்டு விற்பனை செய்கின்றனர்.
இதே போல், மீன் இறைச்சியும் குளிர் சாதன பெட்டகத்தில் வைக்காமல் வெட்ட வெளியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற இறைச்சி வகை மற்றும் உணவு பொருட்களை உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படுகிறது.
இந்நிலையில், ஊட்டி மார்க்கெட்டில் கோழி, ஆடு, மாட்டிறைச்சி மற்றும் மீன் கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரவி தலைமையில் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், கடைகளில், உரித்த கோழி இறைச்சி தொங்க விடப்பட்டிருந்தன. இதே போல், ஆட்டிறைச்சியும் மற்றும் மாட்டிறைச்சியும் தொங்க விடப்பட்டிருந்தன. அவற்றை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வாடிக்கையாளர்கள், கடைக்கு வந்த கேட்ட பின்னரே கோழிகளை வெட்டி, இறைச்சியை கொடுக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் முன்னதாக இறைச்சிகளை வெட்டி தொங்க விடக் கூடாது என எச்சரித்திருந்தனர். இறைச்சிகள் தொங்க விடப்பட்டு விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்வது மட்டுமின்றி கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து ஆடு, மாட்டிறைச்சி கடைகளுக்கு சென்று நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். மேலும், இறைச்சிகளை கடைக்கு வெளியில் தொங்க விடக் கூடாது, குளிர் சாதன பெட்டியில் வைத்தே விற்பனை செய்ய வேண்டும். சுகாதார துறை அதிகாரிகளின் முத்திரை பெற்ற இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என எச்சரித்தனர்.
ஊட்டி மார்க்கெட் மற்றும் மெயின் பஜார் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மீன் வகைகளை குளிர் சாதன பெட்டியில் வைத்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். திறந்த வெளியில் மீன்களை வைத்து விற்பனை செய்யக் கூடாது என்று கூறினர். மேலும் மெயின் பஜார் பகுதியில் 10 கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5ஆயிரம் மதிப்புள்ள பான்பராக், ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்க ளையும் பறிமுதல் செய்தனர்
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரவி கூறுகையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இறைச்சி கடைகளில் காலை முதல் மாலை வரை திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. பல மணி நேரம் திறந்த வெளியில் இறைச்சியை வைத்தால், அது அழுகி விடும்.
இதனை உட்கொண்டால் பல்வேறு உடல் உபாதைகள் வரும். எனவே, இறைச்சி கடைகளில் இனி குளிர்சாதன பெட்டியில் இறைச்சியை வைத்தே விற்பனை செய்ய வேண்டும்.
கோழிகளை, வாடிக்கையாளர்கள் கேட்கும் போது மட்டுமே வெட்டி இறைச்சியாக கொடுக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் முன்னதாக வெட்டி தொங்க விடக் கூடாது. மீன் வியாபாரிகள் கண்டிப்பாக, குளிர்சாதன பெட்டியை பயன்படுத்த வேண்டும்.

கோழிகளை, வாடிக்கையாளர்கள் கேட்கும் போது மட்டுமே வெட்டி இறைச்சியாக கொடுக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் முன்னதாக வெட்டி தொங்க விடக் கூடாது. மீன் வியாபாரிகள் கண்டிப்பாக, குளிர்சாதன பெட்டியை பயன்படுத்த வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட, கெடாத மீன்களையே வாடிக்கையாகளர்களுக்கு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடை உரிமையாளர்களுக்கு பொருந்தும் என்றார். ஆய்வின் போது, சுகாதார துறை ஆய்வாளர்கள் சிவக்குமார், சிவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment