Nov 22, 2013

ராயபுரம் பகுதியில் குடோனில் பதுக்கிய ஸீ1 கோடி குட்கா பறிமுதல்-அதிகாரிகள் நடவடிக்கை


பெரம்பூர், நவ. 22:
தமிழகம் முழுவதும் பான்பராக், ஹன்ஸ், குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இவற்றை விற்பவர்கள் மீதும், பதுக்கி வைப்பவர்கள் மீதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி சவுகார்பேட்டை குமரப்ப மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லட்சுமி நாராயணாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் சதாசிவம், ஜெயராஜ், ஜெயகோபல், இளங்கோ, சுந்தரராஜ் ஆகியோர் அங்கு சோதனை நடத்தினர். அங்கு 4 டன் குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரணை நடத்தியதில் ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் டன் கணக்கில் குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் ராயபுரம் பகுதியில் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது எஸ்என் செட்டி தெருவில் மண்ணடியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான ஒரு குடோனில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று சோதனை செய்தபோது 10க்கு மேற்பட்ட வடமாநில வாலிபர்கள் வேலை பார்த்தனர். குடோனில் 32 டன் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ஸீ1.11 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்டு, தமிழகம் முழுவதும் சப்ளை செய்ய குடோனில் பதுக்கி வைத்து இருந்தனர். அவற்றை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் குடோனுக்கு சீல் வைத்துள்ளோம். இவற்றை கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் இன்று பள்ளம் தோண்டி அழிக்க உள்ளோம் என்றனர்.

No comments:

Post a Comment