Oct 25, 2013

ஜவ்வரிசியில் மக்காச்சோளம் கலப்படம் சேகோ மில் உரிமையாளர்கள் குமுறல்



பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், மரவள்ளி ஸ்டார்ச் மாவில், மக்காச்சோளம் மாவை கலந்து, ஜவ்வரிசி உற்பத்தி செய்து, வெளிமார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அதனால், தரமான ஜவ்வரிசி தயார் செய்து விற்பனை செய்யும் மில் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
சேலம் மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட சேகோ மில்கள் இயங்கி வருகின்றன. இங்கு, மரவள்ளி கிழங்கில் இருந்து ஸ்டார்ச், ஜவ்வரிசி தயார் செய்து, வட மாநிலம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலர வைக்கப்பட்ட ஸ்டார்ச் மாவு, குளுக்கேஸ், சாக்லேட், டூத்பேஸ்ட், பிஸ்கட், முறுக்கு, போண்டா, பஜ்ஜி மாவு ஆகியவை தயாரிக்க பயன்படுகிறது.
ஈரதன்மையுடன் இருக்கும் ஸ்டார்ச் மாவில், ஜவ்வரிசி தயார் செய்யப்படுகிறது. ஈரமான ஸ்டார்ச் மாவில், மக்காச்சோளம் மாவை கலப்படம் செய்து, ஜவ்வரிசி தயார் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தொழில் போட்டியை சமாளிக்கவும், கூடுதல் லாபம் பார்க்கவும், ஸ்டார்ச் மாவில், மக்காச்சோளம் கலந்து, ஜவ்வரிசி தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
அதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, தரமான ஜவ்வரிசி உற்பத்தி செய்யும், சேகோமில் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
சேகோ மில் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
சேலம், தம்மம்பட்டி, ஆத்தூர், நாமகிரிபேட்டை, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் இயங்கும் சேகோ மில் உரிமையாளர்கள் சிலர், 140 கிலோ எடை கொண்ட, ஈரத்தன்மை கொண்ட ஸ்டார்ச் மாவை, 4,000 ரூபாய்க்கு வாங்கிச் சென்று, அதில் மக்காச்சோளம் மாவை கலந்து, ஜவ்வரிசி தயார் செய்கின்றனர். மக்காச்சோளம் மாவு கலந்த ஜவ்வரிசி வெளுக்க, ரசாயனம் பயன்படுத்துகின்றனர்.
தரமான ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ), 5,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்காச்சோளம் கலப்படம் செய்த ஜவ்வரிசி, 5,000 ரூபாய்க்கு விற்கின்றனர். இதனால், தரமான ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் என்னை போன்ற மில் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
சேகோசர்வில், பரிசோதனை செய்யப்பட்டு, ஜவ்வரிசி விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. அதனால், மக்காச்சோளம் கலப்படம் செய்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசியை, சேகோசர்வ் கொண்டு வராமல், வெளிமார்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில், ஆண்டுக்கு சராசரியாக, பத்து லட்சம் ஜவ்வரிசி மூட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 25 சதவீதமான, மூன்று லட்சம் ஜவ்வரிசி மூட்டைகள் மட்டுமே, சேகோசர்வ் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மீதம் உள்ள, 75 சதவீத ஜவ்வரிசி மூட்டைகள், வெளிமார்கெட்டில், பில் இல்லாமல் விற்பனை செய்கின்றனர்.
இதில், மக்காச்சோளம் கலந்த ஜவ்வரிசி அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. கலப்படம் அதிகரித்துள்ளதால், சேகோசர்வ்க்கு ஜவ்வரிசி வரத்து குறைந்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு சட்டப்படி, ஜவ்வரிசியில், எந்த பொருளையும் கலக்கக்கூடாது. ஆனால், மக்காச்சோளம் மாவு கலப்படம் செய்து தயாரிக்கப்பட்ட, ஜவ்வரிசி விற்பனையை, அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை.
சேகோசர்வ் மூலம் தரப்பரிசோதனை சான்று பெற்று, ஜவ்வரிசி விற்பனை செய்தால், கலப்படம் தடுக்கப்படும். அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, தரமான ஜவ்வரிசி உற்பத்தி செய்யும், மில் உரிமையாளர்களும் நஷ்டம் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment