தமிழகம் முழுவதும் 814 போலி குடிநீர் நிறுவனங்கள் இயங்குவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
கேன் குடிநீரின் தரம் குறைவு தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு பசுமைத் தீர்ப்பாய நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழகத்தில் உள்ள குடிநீர் நிறுவனங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்காததால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டதோடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனவும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை (அக்.7) ஆஜரான மாசுக்கட்டுப்பாட்டுத் துறையினர் 485 பக்கம் கொண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள குடிநீர் நிறுவனங்களின் எண்ணிக்கை, அவற்றின் உரிமம் பெற்றவர்களின் எண்ணிக்கை, குடிநீரின் தரம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றன.
ஆய்வறிக்கையில் உள்ள தகவல்கள்: தமிழகம் முழுவதும் 967 குடிநீர் நிறுவனங்கள் உள்ளன. அதில் 153 நிறுவனங்கள் அனுமதி பெற்று இயங்குகின்றன. 814 நிறுவனங்கள் அனுமதிப் பெறாமல் இயங்கி வருகின்றன.
805 நிறுவனங்களில் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதன் முடிவுகளில் "ஏ' பிரிவில் உள்ள 553 நிறுவனங்களின் தண்ணீர் மிக நல்ல முறையில் குடிக்க உகந்த வகையிலும், "பி' பிரிவில் உள்ள 100 நிறுவனங்களின் தண்ணீர் குடிக்க உகந்த வகையிலும், "சி' பிரிவில் உள்ள 27 நிறுவனங்களின் தண்ணீர் குடிக்க இயலாததாகவும், "டி' பிரிவில் உள்ள 115 நிறுவனங்கள் மிகவும் மோசமான குடிக்க இயலாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அனுமதி பெறாமல் இயங்கும் குடிநீர் நிறுவனங்கள், பொதுப்பணித்துறையிடம் நிலத்தடி நீர் எடுக்கலாம் என்ற உரிமத்தையும், உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்துக்கட்டுபாட்டுத் துறையிடம் எடுத்த குடிநீர் தரமாக உள்ளது என்ற அனுமதியையும், நகர் மற்றும் ஊரமைப்புத் துறையிடம் குறிப்பிட்ட இடம் நிறுவனம் அமைக்க ஏற்றது என்ற அனுமதியையும் பெற வேண்டும். இந்த அனுமதிகளை பெற்ற பிறகு தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடம் அனுமதிக்காக நவம்பர் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கினை நவம்பர் 29-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment