சென்னை: "மாநிலம் முழுவதும், 814 குடிநீர் நிறுவனங்கள் அனுமதி பெறாமல்
செயல்படுகின்றன' என, பசுமைத் தீர்ப்பாயத்தில், மாசுக்கட்டுப்பட்டு வாரியம்
அறிக்கை தாக்கல் செய்தது.
தனியார் குடிநீர்
நிறுவனங்களில் இருந்து, விற்பனைக்கு அனுப்பப்படும் குடிநீர் தரமானது இல்லை
என, தெரிய வந்ததால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் - தென்மண்டலம், தாமாக முன்
வந்து வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதி
சொக்கலிங்கம், பேராசிரியர் நாகேந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு
வந்தது. "தமிழகத்தில் உள்ள, 967 குடிநீர் நிறுவனங்களில், 153 நிறுவனங்கள்
மட்டுமே வாரிய அனுமதி பெற்றுள்ளன; 814 நிறுவனங்கள் அனுமதி பெறவில்லை. 391
நிறுவன மாதிரி பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன. 499 நிறுவனங்களின்
மாதிரிகளின் பரிசோதனை நடந்து வருகிறது' என, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
அறிக்கை தாக்கல் செய்தது. இதில், 814 நிறுவனங்கள்,அனுமதி பெறாதது குறித்து,
தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. வர்த்தக ரீதியாக நிலத்தடி நீர் எடுக்க,
உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளதால் அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை
என, குடிநீர் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட்டில்
நடக்கும் இது தொடர்பான வழக்கில் இணைந்து, குடிநீருக்கு தண்ணீர் எடுப்பது
தொடர்பாக, விலக்கு பெறுமாறு குடிநீர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மத்திய உணவு பாதுகாப்புத் துறை சார்பில், அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அதன்படி, "ஹெர்பல், பிளேவர்டு' குடிநீர் நிறுவனங்கள், முதலில் குடிநீர்
உற்பத்திக்கான அனுமதி பெற வேண்டும் என, தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
உற்பத்தி, விற்பனைக்கான தடையை நீக்க மறுத்த தீர்ப்பாயம், விசாரணையை, அடுத்த
மாதம், 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
No comments:
Post a Comment