Sep 23, 2013

சேலம் பெரமனூர், அழகாபுரத்தில் போலி குளிர்பான தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு 2 பேர் கைது- 700 பாட்டில்கள் பறிமுதல்

சேலம், செப்.22-
சேலம் பெரமனூர், அழகாபுரத்தில் போலி குளிர்பான தொழிற்சாலைகள் நடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்து அதற்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். 700 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி குளிர்பானம் தயாரிப்பு
சேலம் அழகாபுரம், பெரமனூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் பிரபல குளிர்பான நிறுவனங்களின் பெயரில் அனுமதியின்றி தொழிற்சாலை நடத்தி போலியாக குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு தலைமையில் சூரமங்கலம் உதவி கமிஷனர் சந்திரசேகரன், அழகாபுரம் இன்ஸ்பெக்டர் கபிலன், பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று மாலை பெரமனூர் மெயின்ரோட்டில் உள்ள அய்யனாரப்பன் கோவில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பிரபல முன்னணி குளிர்பான நிறுவனங்களின் பெயரில் அனுமதியின்றி போலியாக குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்ததும், அந்த குளிர்பானங்கள் டாஸ்மாக் பார்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து ஒரு ஆண்டாக போலி குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்த ஓமலூர் காமலாபுரத்தை சேர்ந்த குமார் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், குடோனில் வைத்திருந்த குளிர்பான பாட்டில்களையும், குளிர்பானம் தயாரிக்க பயன்படுத்திய கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், அழகாபுரம் பெரியான்வட்டம் குட்டத்தெருவில் சித்தையன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு முன்னணி குளிர்பான நிறுவனத்தின் பெயரில் போலியாக குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்ததும், முன்னணி நிறுவன பெயரில் மினரல் வாட்டர் கேன் தயாரித்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வீட்டில் வைத்திருந்த போலி குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் கேன்களையும் பறிமுதல் செய்தனர்.
பேட்டி
இது குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு நிருபர்களிடம் கூறுகையில், முன்னணி நிறுவனத்தின் பெயரில் அனுமதியின்றி குளிர்பானம், தண்ணீர் தயாரித்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் 2 இடங்களில் சோதனை நடத்தினோம். அப்போது தொழிற்சாலைகளில் போலியாக குளிர்பானம், தண்ணீர் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 700 குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

No comments:

Post a Comment