Aug 5, 2013

"டாஸ்மாக்' பார்கள் நிலைமை மோசம் மாவட்ட நியமன அலுவலர் எச்சரிக்கை


சேலம்: ""சேலம் மாவட்டத்தில், டாஸ்மாக் பார்களின் நிலைமை படுமோசமாக உள்ளது. அதை, சுத்தம், சுகாதாரமாக பராமரிக்க மறுத்தால், கடும் நடவடிக்கை பாயும்,'' என, மாவட்ட நியமன அலுவலர் அனுராதா எச்சரித்துள்ளார்.
சேலம், விஜயராகவாச்சாரியார் நூலக வளாகத்தில், "உணவும், பாதுகாப்பும்' என்கிற தலைப்பில், சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் பூபதி தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் சரவணமூர்த்தி, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கலந்து கொண்டு பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில், 16,582 வணிக நிறுவனங்கள் பதிவு மற்றும் உரிமம் பெற்று, தமிழகத்திலேயே, முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், பதிவு, உரிமம் பெற, வருகிற ஃபிப்., 2014ம் வரை இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடைக்கால உத்தரவு முடிந்ததும், தொடர்ந்து, வணிக நிறுவனங்கள் பதிவு பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடரும்.
மேலும், கலப்பட பொருட்களை பறிமுதல் செய்து, அதை பகுப்பாய்வு செய்து, பரிசோதனைக்கு அனுப்பப்படும். 15 நாளில் அதற்கான ரிஸல்ட் பெற்று சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நீதிமன்ற நடவடிக்கை பாயும். குறைந்தது ஆறு மாதம் ஜெயில் தண்டனையும், அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.
சேலம் மாவட்டத்தில், டாஸ்மாக் பார்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அங்கு, சோதனைக்குச் சென்றால், உடனடியாக அரசியல் கட்சியினர் சிபாரிசுக்கு வந்து விடுகிறார்கள். இருந்தும், இரண்டொரு முறை அறிவுறுத்தப்படும். தொடர்ந்து, அதே நிலை நீடித்தால், பார் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் கேன்கள், இனி வெள்ளை நிறத்துக்கு பதிலாக, ப்ளூ கலரில் பயன்படுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விரைவில், அவை அமலுக்கு வர உள்ளதால், வெள்ளைநிற கேன்கள் பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment