Jul 23, 2013

அனுமதியில்லாத "ஹெர்பல்' குடிநீர் நிறுவனங்கள்: உற்பத்தி, விற்பனைக்கு பசுமை தீர்ப்பாயம் தடை


சென்னை: அனுமதியின்றி செயல்படும், "ஹெர்பல்' குடிநீர் உள்ளிட்ட, அனைத்து விதமான குடிநீர் நிறுவனங்களின் உற்பத்தி, விற்பனைக்கு இடைக்கால தடை விதித்துள்ள பசுமை தீர்ப்பாயம், "ஒரு வாரத்தில் அனுமதி கோரி, உணவு பாதுகாப்புத் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்' என, கெடு விதித்துள்ளது.
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து அனுப்பும் குடிநீர் தரமாக இல்லை என, தெரிய வந்ததால், சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தானாக முன் வந்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பல நிறுவனங்கள் மூடப்பட்டு, தர பரிசோதனைக்குப் பின், செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளன. இந்த நிலையில், "ஹெர்பல், பிளேவர்டு' குடிநீர் என்ற பெயரில் இயங்கும் குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான விசாரணை, பசுமை தீர்ப்பாயத்தில் (தென் மண்டலம்) நேற்று நடந்தது, "பிளேவர்டு' குடிநீர் நிறுவனங்கள் சார்பில், "வெட்டிவேர் உள்ளிட்ட மணம் வீசும் பொருட்கள் கலந்து குடிநீர் தயாரிக்கிறோம். எங்கள் நிறுவனங்கள், உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருவதால், ஐ.எஸ்.ஐ., சான்று பெற முடியவில்லை. உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனுமதிக்க கோரி விண்ணப்பிக்க, அடுத்த ஆண்டு பிப்., வரை அவகாசம் உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் பிறப்பித்த உத்தரவில், "அனுமதி பெறாத," ஹெர்பல்' குடிநீர், "பிளேவர்டு' குடிநீர் உள்ளிட்ட எல்லா விதமான குடிநீர் நிறுவனங்களிலும், குடிநீர் உற்பத்தி, மார்க்கெட்டிங், விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர். மேலும், "அனுமதியில்லாத குடிநீர் நிறுவனங்கள், முறையான அனுமதி கோரி, ஒரு வாரத்திற்குள் உணவு பாதுகாப்புத் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். உணவு பாதுகாப்புத் துறை, குடிநீருக்கான தர விதிமுறைகள் உள்ளதா என, ஆய்வு செய்து, அதன் அறிக்கையை, அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்' எனவும், உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை, ஆக., 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment