Jun 25, 2013

வேலூர் மாவட்டத்தில் பான்மசாலா விற்பனையை தடுக்க குழு அமைக்கப்படுகிறது கலெக்டர் தகவல்


வேலூர் மாவட்டத்தில் பான்மசாலா, குட்கா போன்றவற்றின் விற்பனையை தடுக்க குழு அமைக்கப்படுகிறது என்று கலெக்டர் சங்கர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சங்கர் தலைமையில் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சங்கர் பேசியதாவது:–
குழு அமைப்பு
பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை கலந்த உணவு பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்து உள்ளது. இதன்படி வேலூர் மாவட்டத்தில் விற்பனை மற்றும் தயாரித்தலை தடுக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இதன்படி சோதனைக்கு செல்லும் குழுவினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக சென்று பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த அதிகாரியும் தனியாக செல்லக்கூடாது. போலீசாருடன் சென்று சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
வாகன சோதனை
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களை சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வது தெரிய வந்தால் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த குழுவில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, வணிகவரித்துறை, உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு கலெக்டர் சங்கர் பேசினார்.
கூட்டத்தில் இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) குமார், துணை இயக்குனர் பூங்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, வட்டார போக்குவரத்து அலுவலர் பொன்.செந்தில்நாதன், மாநகராட்சி என்ஜினீயர் தேவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment