கோவை : பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படும் உணவகங்கள் என்றாலே, இனி கொஞ்சம் யோசித்துதான் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்களில் செயல்படும் உணவகங்கள், டீ ஸ்டால்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதுடன், அதிக கட்டணமும் வசூலிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது. காந்திபுரத்தில் மத்திய மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட்கள், அரசு விரைவு போக்குவரத்துக் கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ் ஸ்டாண்ட் என மூன்று உள்ளன.
இந்த பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் நுாற்றுக்கணக்கானோர், தினமும் பயணிப்பதால் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.இவற்றை சாதகமாக்கிக்கொண்டு, பஸ் ஸ்டாண்ட்களில் செயல்படும் சில உணவகங்களும், டீக்கடைகளும் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதுடன், சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.கழிவறை தண்ணீரில்...எஸ்.இ.டி.சி., பஸ் ஸ்டாண்டில் செயல்படும் ஒருசில கடைகள், அங்குள்ள கட்டண கழிவறைக்கு செல்லும் தண்ணீரை, 'சின்டெக்ஸ் டேங்க்' களில் சேமித்து வைத்து பயன்படுத்தி வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
வெளி மாநில பயணிகளிடம் இரவு நேரத்தில், டீ, காபிக்கு, 25 ரூபாய் வரையும், பரோட்டா ஒன்றுக்கு, 40 ரூபாய் வரையும் தங்கள் இஷ்டத்துக்கு உயர்த்தி, கட்டணம் வசூலித்து வருகின்றனர். விலைக்கு ஏற்ற தரமான உணவு கிடைப்பதில்லை என்பதுடன், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பயணிகள் கூறுகையில், 'இங்குள்ள கடைகளில், விலை பட்டியலை வெளியே வைக்காமல், இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.குறிப்பாக, பொது கழிப்பிடத்துக்கு செல்லும் தண்ணீரை சேமித்து வைத்து, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கின்றனர்' என்றனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகையிடம் கேட்டபோது, ''காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்களில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.கழிவால் ஆன கிணறு!எஸ்.இ.டி.சி., பஸ் ஸ்டாண்டில் உள்ள பயனற்ற கிணற்றுக்குள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும், கெட்டுப்போன உணவுப் பொருட்களும் கொட்டப்படுவது, சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுத்துள்ளது.
No comments:
Post a Comment