கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் விடிய, விடிய சோதனை நடத்தினர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைத்த 5 டன் பழங்களை பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், ‘ஈத்தலின்’ என்னும் ரசாயனத்தை தண்ணீரில் கலந்து, அதை வாழைத்தார்கள் மீது ஊற்றி செயற்கை முறையில் வாழை பழங்களை பழுக்க வைத்து விற்கப்படுவதுடன், சென்னையின் சுற்றுப்புற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியானது.
மேலும் இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வீடியோ காட்சிகளுடன் ஏராளமான புகார்களும் வந்தன. இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பழ வியாபாரிகளை எச்சரித்தனர்.
இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் நேற்று முன்தினம் இரவு உணவு பொருள் கட்டுப்பாட்டு நியமன அலுவலர் கதிரவன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சதாசிவம், மணிமாறன், ஜெபராஜ், ராஜாமுகமது மற்றும் அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் 25-க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனை விடிய, விடிய நீடித்தது.
அப்போது ‘ஈத்தலின்’ என்னும் ரசாயனம் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழை பழங்கள், கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த சப்போட்டா, மாம்பழங்கள் என மொத்தம் 5 டன் பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
No comments:
Post a Comment