சபரிமலை: 'சபரிமலையில் பிரசாதம் தயாரிக்க, உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும்' என, சபரிமலை நிர்வாக அதிகாரிக்கு, தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு மண்டல அலுவலகத்தில் இருந்து, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதம் அப்பம் மற்றும் அரவணை. இந்த பிரசாதம் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும், மாநில உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள், சோதனை நடத்துகின்றனர். கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் படி, இந்த பரிசோதனை, தயாரிப்புக்கு முன்பும், பிறகும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறையின், சென்னை மண்டல அலுவலகத்தில் இருந்து, சபரிமலை நிர்வாக அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், 'பிரசாதம் தயாரிக்க உரிமம் பெற வேண்டும்' என்றும், 'இது தொடர்பான முடிவை, நவ.,15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்' என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமும் இரண்டு டன்னுக்கு அதிகமான உணவு தயாரித்தால், அதற்கான உரிமத்தை, மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment