பள்ளிபாளையம்: 'தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. உணவு பொருட்கள் தயாரிக்கும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஏராளமாக உள்ளன. குமாரபாளையம் தாலுகாவில், தனியார் மண்டபம், கடை, பேக்கரிகளில் தீபாவளி இனிப்பு, காரம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்வர். இனிப்பு தயாரிக்கும்போது, செயற்கை நிற வண்ணங்களை கலக்கின்றனர். தற்காலிமாக தீபாவளிக்கு மட்டும் இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள், பெரும்பாலானோர் உணவு பாதுகாப்பு விதிமுறையை சரியாக கடைப்பிடிப்பதில்லை.
எனவே, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 'இனிப்பு, காரம் உள்பட உணவு பொருட்கள் தயாரிக்க, உணவு பாதுகாப்பு துறையில் அனுமதி வாங்க வேண்டும். தீபாவளி சமயத்தில் தயாரித்தாலும் அனுமதி வாங்க வேண்டும். அரசு அனுமதி பெற்ற, அளவுள்ள செயற்கை வண்ணம் மட்டும் பயன்படுத்த வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment