சேலம்: ''சேலம் மாவட்டத்தில், 30 சதவீத உணவு வணிகர்கள் மட்டுமே, பதிவு மற்றும் உரிம சான்றிதழ் பெற்றுள்ளனர்,'' என, கலெக்டர் ரோகிணி பேசினார்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில், நேற்று உணவு வணிகர்களுக்கான உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதை துவக்கி வைத்து, கலெக்டர் ரோகிணி பேசியதாவது: நாட்டில் பாதுகாப்பில்லாத உணவுகளால், ஆண்டுக்கு, 30 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில், அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது குழந்தைகள். எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுடன், வெளியில் விற்கப்படும் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதும் அவர்கள் தான். எனவே பாதுகாப்பான உணவு வழங்க வேண்டும் என்பதற்காகத் தான், உணவு கட்டுப்பாட்டு பிரிவு செயல்பட்டு வருகிறது. உணவு வணிகம் செய்பவர்களுக்கு, பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான கால அவகாசம், 2016, ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள, 20 ஆயிரம் உணவு வணிகர்களில், 6,000 பேர் மட்டுமே உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி, பதிவு மற்றும் உரிம சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். டெங்கு தடுப்பு பணிகளிலும், உணவு வணிகர்கள் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment