கடைகளில் உணவுப்பொருட்களில் கலப்படம் குறித்து ‘வாட்ஸ் அப்’பில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலானவர்கள் பஸ்களில்தான் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். திருவண்ணாமலை பஸ் நிலையத்தை சுற்றி அதிக அளவில் கடைகள், ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தரமற்ற மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது டீக்கடைகள், பழக்கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் உள்ளதா? ஓட்டல்களில் உள்ள உணவு தரமானதுதானா? என பார்வையிட்டார். சில பொருட்களையும் எடுத்து தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரங்களை பார்வையிட்டார். இதில் காலாவதியான மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உணவுப்பொருட்களில் கலப்படம் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக கருதப்படுகிறது. தரமற்ற உணவுப்பொருட்களை பொதுமக்கள் வாங்குவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவ்வாறு விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நுகர்வோர்கள் பொருட்கள் வாங்கும் முன்பு அந்த பொருட்கள் தரமானதா? காலாவதியாகி உள்ளதா? என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். கடைகளில் விற்கப்படும் பொருட்களில் குறைபாடுகள் இருந்தால் அது குறித்த புகாரை 94440 -42322 என்ற ‘வாட்ஸ்- அப்’ எண்ணிற்கு புகைப்படமாகவோ, வீடியோ பதிவாகவோ, எழுத்து மூலமாகவோ பதிவு செய்து அனுப்பலாம். மேலும் அதில் எந்த இடத்தில் கடை அமைந்துள்ளது குறித்த விவரத்தையும் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி சுகாதார வளாகத்தை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலைய கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற உணவுப்பொருட்களை விற்றால் அந்த கடைகளுக்கு அபராதம் மட்டும் இன்றி, கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள் சோதனையின்போது ஒரு சில கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆய்வின்போது நகராட்சி கமிஷனர் பாரிஜாதம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், நகர்நல அலுவலர் வினோத்குமார், நகர உணவு பாதுகாப்பு அலுவலர் காலேஷ்குமார், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணி, சுகாதார ஆய்வாளர் வினோத்கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment