ஆத்தூர்: தாய்லாந்து, இந்தோனேஷியா நாடுகளில் இருந்து, குறைந்த விலையில், ஸ்டார்ச் மாவு இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் உற்பத்தியாகும் மரவள்ளி சார்ந்த பொருட்களின் விலை சரிந்துள்ளது.
தமிழகத்தில், சேலம், நாமக்கல், தர்மபுரி உட்பட, 17 மாவட்டங்களில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. 2016ல், பருவ மழை இல்லாததால், மரவள்ளி கிழங்கு உற்பத்தி குறைந்தது. ஸ்டார்ச், ஜவ்வரிசி தேவை அதிகமாக இருந்ததால், இந்தாண்டு மரவள்ளி கிழங்கு ஒரு மூட்டை (73 கிலோ), 800 முதல், 1,050 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதற்கிடையே, உணவு பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும், 'ஸ்டார்ச்' மாவு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் மட்டுமின்றி, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வதால், மரவள்ளி சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் முன்னேற்ற நலச்சங்க மாநில தலைவர் துரைசாமி கூறியதாவது: நாடு முழுவதும், ஆண்டுக்கு, 25 லட்சம் ஜவ்வரிசி மூட்டைகள் தேவைப்படுகின்றன. ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவுக்கு தேவை அதிகரித்துள்ளதால், கடந்த, 2016 நவம்பரில், ஜவ்வரிசி ஒரு மூட்டை (90 கிலோ), 4,023 ரூபாயும், ஸ்டார்ச் மாவு ஒரு மூட்டை (90 கிலோ), 2,841 ரூபாயும், மரவள்ளி கிழங்கு, 650 ரூபாயாக விலை உயர்ந்தது. நடப்பாண்டு, ஜன., 27ல், ஜவ்வரிசி மூட்டை, 6,275 ரூபாய்; ஸ்டார்ச் மாவு, 4,605 ரூபாயாக விலை உயர்ந்தது. கடந்த, ஆக., 29ல், ஜவ்வரிசி மூட்டை, 5,687 ரூபாய்; ஸ்டார்ச், 4,051 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று, ஜவ்வரிசி மூட்டை, 5,760 ரூபாய்; ஸ்டார்ச், 3,951 ரூபாய் என, ஜவ்வரிசி மூட்டைக்கு, 70 ரூபாய் மட்டுமே விலை உயர்ந்துள்ளது. இருந்தும், தமிழகத்தில், ஸ்டார்ச் மாவு விலை அதிகளவில் இருப்பதால், தாய்லாந்து, இந்தோனிஷியாவில் இருந்து, உணவு பொருள் தயாரிக்க அதிகளவில் இறக்குமதி செய்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் இவற்றை தடுக்க முன்வரவில்லை. தவிர, நாமக்கல்லில், எட்டு லட்சம் மூட்டை, சேலத்தில், இரண்டு லட்சம் என, 10 லட்சம் மூட்டை ஜவ்வரிசி பதுக்கி வைத்துள்ளனர். அரசியல் கட்சியினர், உறவினர்களின் சேகோ ஆலைகள் என்பதால், இந்த பதுக்கல் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
மக்காச்சோளம் மாவு, கிலோ, 23 ரூபாய்க்கு கிடைப்பதால், ஸ்டார்ச் மாவில் கலந்து, நாமக்கல், ராசிபுரம், நாமகிரிபேட்டை, மல்லூர் உள்பட, பத்துக்கும் மேற்பட்ட பெரிய ஆலைகளில், தரமற்ற ஜவ்வரிசி தயாரிக்கின்றனர். கலப்படமான ஜவ்வரிசி குறித்து பலமுறை மனு செய்தும், அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால் நடடிக்கை இல்லை. வறட்சியால், சில மாவட்டங்களில் குறைந்தளவில் தான் மரவள்ளி அறுவடை உள்ளது. ஜவ்வரிசி மூட்டை, 8,000 ரூபாயும், ஸ்டார்ச், 5,000 ரூபாய் மற்றும் மரவள்ளி கிழங்கு, 1,500 ரூபாய்க்கு மேல் விற்க வேண்டும். இதனால், தமிழகத்தில், ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு மற்றும் மரவள்ளி கிழங்கு விலை குறைந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் சேகோ தொழில் அழிந்துபோகும். வெளிநாடுகளில் இருந்து, ஸ்டார்ச் மாவு இறக்குமதி செய்வதை, மத்திய, மாநில அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment