"தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது" என்பார்கள். நாம் தண்ணீரைப் பல வழிகளில் பழித்துக் கொண்டதால், அதனை விலைக்கு வாங்கிக் குடித்து பலவகையான நோய்களையும் வரவழைத்துக் கொண்டிருக்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பாட்டில்கள், கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் சிறிது சிறிதாக மனித உயிர்களைக் குடித்து வருவதாக பகீர் கிளப்புகின்றனர் ஆய்வாளர்கள். வாட்டர்கேன்களில் அடைத்து விற்கப்படும் 60 சதவிகிதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளதாகக் கூறுகின்றனர் நுகர்வோர் அமைப்பினர். இது ஒரு புறம் என்றால் ஆழ்குழாய் மூலம் பெறப்படும் நீரும் தற்போது ஏற்பட்டு வரும் கடும் வறட்சி காரணமாக அதன் தன்மையை இழந்து விஷமாக மாறி வருவதாகவும் அதிர்ச்சியூட்டுகின்றனர்.
இது குறித்து இந்திய நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த சாந்தராஜன், "முதலில் இதனை மினரல் வாட்டர் என்று சொல்வது தவறு. கடல் நீரையோ, அல்லது ஆழ்குழாய் நீரையோ வடிகட்டி சுத்திகரித்து கேன்களிள் அடைக்கப்படும் நீர் இது. இந்த நீரை தயாரிக்கும்போது ஐஎஸ்ஐ முத்திரை கொடுத்தவர்கள் காவலுக்கு நிற்காமாட்டர்கள். இதை உணர்ந்து கொள்ளும் பெரும்பாலான நிறுவனங்கள் பிஐஎஸ் நிறுவனத்தின் விதிகளை மதிப்பதில்லை.
உதாரணத்திற்கு மின்சாரம் இல்லை என்றால் வேலை பார்க்காமல் அப்படியே இருந்து விட மாட்டார்கள். அந்த நேரத்தில் தண்ணீரை வடி கட்டாமல் அப்படியே கேன்களில் அடைத்து விடுவார்கள். கேன்களை குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஆனால் பெரும்பாலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பழைய கேன்ளில் தான் நிரப்புகிறார்கள். நாள்பட்ட கேன்களில் தண்ணீரை அடைக்கும்போது அதன் மூலம் பாக்டீரியாக்கள் உருவாகும். அதே போல் தண்ணீர் தயாரிக்கப்படும் இடமும் சுத்தமாக இல்லை என்றால் பாக்டீரியாக்கள் உருவாகும். இப்படிப்பட்ட கேன்களில் இரண்டு தினங்களில் அதன் அடிப்பகுதியில் பாசம் பிடித்து விடும். அடுத்த சில தினங்களில் புழு பூச்சிகள் உருவாகிவிடும். இப்படிப்பட்ட தண்ணீரைத் தான் பெரும்பாலான மக்கள் குடிக்கின்றனர்.
இதனால், வயிற்றுப்போக்கு, சுவாச நோய், எலும்பு நோய், சிறுநீரக நோய், தோல் புற்று நோய்கள்உருவாகிறது. அது மட்டுமல்ல. சுத்திகரிக்கப்பட்ட நீரில் நமது உடலுக்கு தேவையான கனிமப் பொருட்கள், தாதுப்பொருட்கள் நீக்கப்படுகின்றன. ஒரு லிட்டர் தண்ணீரில் கரைந்துள்ள உப்புகள் குறைந்த பட்சம் 500 மில்லி கிராம் வரை இருக்க வேண்டும். அதில்தான் உடம்புக்குத் தேவையான கால்சியம் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் கிடைக்கும். ஆனால் சுத்திகரிக்கப்படுவதால் முதல் 10 மில்லி கிராம் உப்புதான் கிடைக்கிறது. இதனால் உடம்புக்கு எந்தவித நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்காமல் போய்விடுகிறது. மாறாக நோய் உருவாவதற்கு வழியை ஏற்படுத்தி விடுகிறது" என்கிறார்.
கடந்த ஆண்டு சென்னையில் செயல்பட்டு வரும் 10 நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்கி குடிநீர் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி இருந்தார் இந்திய நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணன். அவற்றை "பாக்டீரியோலாஜிகல்" சோதனை செய்து பார்த்தபோது அவை அனைத்துமே குடிக்கத் தகுதியில்லாத நீர் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த நீரில் நச்சுத்தன்மை கொண்ட கனிமங்களும் மனித மலத்தில் இருந்து உற்பத்தியாகும் ஈகோலி, மற்றும் கோலி பார்ம் உள்ளிட்ட மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களும் கலந்திருப்பதும் தெரிய வந்தது.
இதுபற்றி கிருஷ்ணன் கூறுகையில் " வண்டலூரில் உள்ள டீம் என்னும் தனியார் நிறுவனம் மூலிகை நீர் எனக்கூறி குடிநீரை விற்பனை செய்து வந்தது. ஆனால் அந்த நீரை ஆய்வு செய்தபோது ஒரு கோடி பாகத்தில் ஒற்றை அளவு பாகம் கூட மூலிகை கலந்திருக்கவில்லை. இந்த குடிநீரை விற்றதன் மூலம் அந்த நிறுவனம் ரூ 98 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இதனால் அந்த 98 லட்ச ரூபாயை நுகர்வோருக்கு திருப்பி வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளோம். வழக்கும் நடைபெற்று வருகிறது. தண்ணீர் என்பது உயிர் வாழ அவசியமானது. ஆனால், அதில் தில்லுமுல்லு நடப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாட்டு மக்கள் அனைவரும் குடிக்க ஒரே அளவுள்ள தரமான குடிநீரை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும். இந்த திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும்" என்கிறார்.
குடிநீரை வடிகட்டி சுத்திகரிப்பதில் சில விதிமுறைகளைக் கையாள வேண்டும். கச்சா தண்ணீரை கொதிக்க வைத்து டோஸிங்க சிஸ்டம் மூலம் கடினத் தன்மையற்தாக மாற்ற வேண்டும். அடுத்து மண்ணில் வடி கட்டிய பிறகு கார்பன் மூலம் வடி கட்ட வேண்டும். அடுத்து மைக்கான் காண்டிரேஜ் மூலம் வடி கட்டி தண்ணீரில் இருக்கும் நுண்ணிய மண் மற்றும் அசுத்தத் துகள்களை அப்புறப்படுத்த வேண்டும். ஆர்.ஓ மூலம் தண்ணீரில் இருக்கும் தேவையற்ற உப்புக்கள் நீக்கப்படும். அடுத்து நுண் வடித்தல் மற்றும் புற ஊதாக்கதிர்கள் மூலம் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அங்கீகாரம் பெற்ற பரிசோதனை கூடம் அவசியம். அதில் பரிசோதனை செய்த தண்ணீரை இந்தியத் தர நிர்ணய அமைப்புக்கு மாதிரி அனுப்பி குடிக்கத் தகுந்தது என்று சான்றிதழ் பெற வேண்டும். அதன் பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும். பிஐஎஸ் அமைப்பு தண்ணீர் நிறுவனங்களில் கச்சா நீரை மாதம் இரு முறை சோதனை செய்யும். குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பாட்டிலில் அல்லது கேன்களில் தொழில் நுட்ப விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, பேட்ச் எண், காலாவதி தேதி ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றைச் செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.
இது குறித்து தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாராமனிடம் பேசினோம். "தயாரிப்பு பற்றிய விவரங்களோடுதான் விற்பனைக்கு அனுப்புகிறோம். ஒரு சில கேன்களில் மை அழிந்திருக்கலாம். ஏராளமான போலி நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. அந்த நிறுவனங்களால் நேர்மையாக தொழில் செய்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தினால் நிலைமை சரியாகி விடும். அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்கிறார் அவர்.
இது குறித்து இந்தியத்தர நிர்ணய சான்றிதழ் வழங்கும் அலுவலர் பாவானி நம்மிடம், ’92 பொருட்கள் ஐஎஸ்ஐ முத்திரையில்லாமல் தயாரிக்கப்படக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அடைத்து விற்பது உட்பட அந்தப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பிஐஎஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் உற்பத்திப் பொருட்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அவற்றை சோதனை செய்து இந்தச் சான்றிதழை வழங்குகிறோம். அந்த வகையில் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர் மாதிரியை எடுத்து தனியார் பரிசோதனைக் கூடங்கள் மூலவாகவும் பிஐஎஸ் நிறுவனத்தில் உள்ள பரிசோதனைக் கூடங்கள் மூலமாகவும் பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். சுத்திகரிக்கப்படும் நிறுவனத்தில் இருக்க வேண்டிய இயந்திரங்கள், இடத்தின் அமைப்பு, தொழிலாளர்கள் கடைபிடிக்க விதிகள் என பல்வேறு விதிமுறைகளையும் வகுத்துள்ளோம்.
இவற்றை பின்பற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்குகிறோம். அப்படி வழங்கப்படும் ஐஎஸ்ஐ முத்திரை சான்றிதழ் ஒரு வருடம் செல்லுபடியாகும். சான்றிதழ் பெற்று இயங்கி வரும் நிறுவனங்களுக்குச் சென்று திடீர் சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த நிறுவனங்கள் தினம், மாதம், காலாண்டு, ஆறு மாத காலம் என்று அவர்கள் தயாரித்த தண்ணீர் பற்றிய விவரங்களை எங்களுக்கு அளிக்க வேண்டும். அதே போல் மார்க்கெட்டில் விற்கப்படும் இடத்தில் இருந்து தண்ணீரை எடுத்து சோதனை மேற்கொள்கிறோம். இவற்றை எல்லாம் சரியாகக் கடைபிடிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அதற்கடுத்த வருடத்திற்கான சான்றிதழை புதுப்பிக்கிறோம். ஆனாலும், ஐ.எஸ்ஐ முத்திரை பெறாமல் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்களை அவ்வப்போது கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இப்படிப்பட்ட நிறுவனங்கள் ஆங்காங்கே இருந்து வருவதை மறுக்க முடியாது. தயாரிப்பு பற்றிய விவரங்கள் அச்சிடாமல் வெளிவரும் தண்ணீர் கேன்களை மக்கள் வாங்கக் கூடாது. மசாலா, மாவுப் பாக்கெட்டுகளில் எக்ஸ்பயரி பார்க்கும் மக்கள், தண்ணீரை வாங்கும்போது கண்டு கொள்வதில்லை. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரின் ஆயுட்காலம் 30 நாட்கள் மட்டும் தான். அப்படி தயாரிப்பு விவரங்கள் வெளியிடாத நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்கிறார்.
இது ஒரு புறம் என்றால் ஆழ்குழாய் நீரின் தன்மையும் குடிப்பதற்கான தகுதியை இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் பீதிகிளப்புகின்றன. தொடரும் கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. கழிவு நீர், தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் பூமியில் கலப்பதாலும், நிலத்தடி நீர் பெருமளவில் பாதிக்கப்பட்டு விட்டதாலும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரை அருந்தினால் உயிருக்கே ஆபத்து " என்கிறார்கள் தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறையினர். இது குறித்து தலைமை நீர்ப்பகுப்பு ஆய்வாளர் வடிவேலு நம்மிடம் "பெதுவாக நிலத்தில் இருந்து கிடைக்கும் ஆழ்குழாய் நீரில் க்ளோரைடு, நைட்ரேட், அயர்ன், ப்ளோரைடு பேன்றவை இடத்திற்குத் தகுந்தாற்போல மாறுபடும். சென்னையைப் பெறுத்தவரை அண்ணாநகர், வளசரவாக்கம் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மஞ்சள் தன்மை வாய்ந்தவை. அதாவது இரும்பு தாது நிறைந்தவை. இதனை குடிநீராகப் பயன்படுத்த முடியாது. ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் ப்ளோரைடு தாதுக்கள் இருக்கும் இதுவும் குடிப்பதற்கு உகந்ததல்ல. இப்படி இடத்திற்கு இடம் தாதுக்கள் மாறுபட்டு வரும். ஆழ்குழாய் கிணறு அமைத்து வெளிக்கொணறும்போது தண்ணீரை ஆய்வு செய்து அதில் குடிநீருக்கான தகுதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வு மழை நீர் சேகரிப்புத்தான். மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும். அப்போது தான் நீரின் தன்மை மாறும்" என்கிறார்.
பிறகு எந்த தண்ணீரைத் தான் பருகுவது..?
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆழ்குழாய் குடிநீர் மற்றும் வடிகட்டப்பட்ட குடிநீரை அருந்துவதை விட தமிழ்நாடு அரசின் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் ஏரிகளில் இருந்து பெறப்படும் மெட்ரோ குடிநீர்தான் உடலுக்கு உகந்தது என்கிறார் பொதுச்சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் டாக்டர். குழந்தைச்சாமி.
"பொது மக்களின் நலத்தையும், தண்ணீரின் அவசியத்தையும் உணர்ந்து தற்போது திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தண்ணீர் ஆய்வகத்தை உருவாக்கி உள்ளோம். அதன் மூலம் நீரில் உள்ள நுண்ணுயிர்கள் மற்றும் ப்ளோரைட் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். இதை பொது மக்களின் நலன் கருதி பொதுச் சுகாதாரத்துறை செய்து வருகிறது. இந்த ஆய்வில் ப்ளோரைடு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. பாதுகாப்பான நல்ல குடி நீர் வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். நிலத்தடி நீர் மட்டுமல்லாமல் நிலத்திற்கு மேல் உள்ள நீர்நிலைகளிலும் ஆய்வுகளை மேற்கொள்கிறோம். ஆறு, குளம், குட்டைகளில் இருந்து கிடைக்கும் நீரில் ப்ளோரைடு இருக்காது. அதனை அருந்துவதுதான் பாதுகாப்பானது. அதனால்தான் தமிழ்நாடு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், மெட்ரோ நிர்வாகமும் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் கிடைக்கும் வழி வகைகளை அதிகரித்து வருகிறது. நில நீர்மட்டத்தில் இருந்து கிடைக்கும் அந்த நீருக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. நிலத்தடி நீரில் மினரல்ஸ் குறைவு. 500 அடி முதல் 1000 அடிவரை கிடைக்கும் நிலத்தடி நீர் எப்போதும் ஒரே தன்மை கொண்டது தான். இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல" என்கிறார்.
தண்ணீர் வர்த்தகம்!
இந்திய அளவில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வரை மினரல் வாட்டர் நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருகின்றன. தமிழகத்தில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட நீர் மூலம் ஆண்டுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள். சென்னையில் நாளொன்றுக்கு 90 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனை செய்யப்படுகிறது. போலி நிறுவனங்கள் 450 க்கும் அதிகமாக உருவாகி உள்ளன.
குடிநீரில் இந்தியாவின் தரம்:
122 நாடுகளில் குடிநீரின் தரத்தை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 120 வது இடம்! குடிநீரில் 500 மில்லி கிராம் அளவுக்குத்தான் 16 வகையான தாதுக்களின் கூட்டுத்தொகை இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் கிடைக்கும் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக ஆயிரம் மில்லி கிராம் அளவிற்கு தாதுப் பொருட்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இயற்கையான தண்ணீர் சேகரிப்பு முறைகள் அழிக்கப்பட்டதும் கழிவுகள் முறையாக பராமரிக்கப்படாததும்தான் இதற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பிரேக் ஆயில் நீர் நிலையில் கலந்தால் 1 லட்சத்து 58 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மாசுபட்டு விடும் அபாயம் உள்ளது. ஆனால் இந்தியாவில் கட்டுப்பாடுகள் இல்லாமல், சுத்திகரிக்கப்படாமல் தொழிற்சாலைகளில் இருந்து நீர் நிலைகளில் பல லட்சம் லிட்டர் கழிவுகள் கலந்து வருகின்றன. இந்த லட்சணத்தில் இந்தியாவில் குடிநீரின் தரம் எப்படி இருக்கும்?
No comments:
Post a Comment