சேலம்: சேலத்தில், 16 டன் கலப்பட ஜவ்வரிசி, லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து, கலப்பட ஜவ்வரிசி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, சேலம் வருவதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அலுவலர்கள், நேற்று மதியம், 3:00 மணியளவில், கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, புகாரில் தெரிவித்த எஸ்.ஆர்.எஸ்., என்ற லாரியை மடக்கினர். அதன் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள், லாரியில் இருந்த முகவரி, மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டனர். ராசிபுரம் அருகே, காகாவாரி யில் உள்ள வெங்கட்ராயர் சேகோ தொழிற்சாலையில் இருந்து, 16 டன் ஜவ்வரிசி லோடு ஏற்றிவந்தது தெரிந்தது. ஜவ்வரிசி லோடுடன், லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஜவ்வரிசி மதிப்பு, 10 லட்ச ரூபாய்.
உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது: வெங்கட்ராயர், டிரைவர் உதவியுடன், லாரி, என் அலுவலகம் கொண்டு வரப்பட்டது. பின், ஜவ்வரிசியை பரிசோதிக்க மாதிரி எடுத்தோம். மரவள்ளி கிழங்கில், மக்காச்சோள மாவு கலந்து, கலப்பட ஜவ்வரிசி தயாரிக்கப்பட்டது தெரிந்தது. அதை உறுதிப்படுத்த ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி உள்ளோம். வக்கீலுடன் வந்து, நடவடிக்கை கூடாது என நெருக்கடி கொடுத்தும், அதற்கு இணங்கவில்லை. முறைப்படி, நோட்டீஸ் கொடுத்து, பத்திரத்தில் எழுதிக் பெற்று கொண்டு, பாதுகாப்புக்காக, ஜவ்வரிசி லோடுடன், லாரியை ஒப்படைத்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment