Oct 10, 2016

உங்கள் தட்டில்... ( சட்டமும் சந்தேகங்களும்)

இப்பொழுதெல்லாம் அநேகமாக எல்லா பொருட்களையுமே முன்தயாரித்ததாகவே (Readymade) வாங்கி விடுகிறோம். நம் அவசரத் தேவை. அதனால் வாங்குகிறோம்.
சரி தேங்காய் எண்ணை, உணவுக்கும் பயன்படுத்தலாம், அழகு சாதனமாக தலைக்கும் தேய்க்கலாம். மஞ்சளை சமையலுக்கும் பயன்படுத்தலாம், அழகுப் பொருளாக பூசு மஞ்சளாகவும் பயன்படுத்தலாம். விளக்கெண்ணையை உள் உணவாகவும் எடுக்கலாம், விளக்குக்கும் பயன்படுத்தலாம். ஆனால் பொருள் என்னவோ ஒன்றே தான்.
அப்படி இருக்க, கடைகளில், ப்ராண்டட் பொருட்கள் வகையறாவில், பூசு மஞ்சள், கூந்தல் தைலம் எனத் தனியாகவும், உணவுக்கான மஞ்சள், உணவுக்கான தேங்காய் எண்ணை எனத் தனியாகவும் விற்பது ஏன்? உணவுக்கான விளக்கெண்ணை வேறாகவும், விளக்கிற்குப் பயன்படுத்தும் விளக்கெண்ணையும் வேறாகவும் விற்பது ஏன்? சிந்தித்திருக்கிறோமா?
விளக்கெண்ணையை விளக்கெரிக்கப்பயபடுத்தினால் அத்தோடு வாசனைக்காக சில பொருட்கள் சேர்த்திருப்பதாகச் சொல்வது உண்மையா? ஒரே பொருளை உணவிற்கு வேறாகவும், வெளிப்பயன்பாட்டிற்கு வேறாகவும் விற்பதன் காரணம்? கூந்தல் தைலத்தில் கூந்தலை வளப்ப்படுத்த இன்னும் சில பொருட்களைச் சேர்த்திருப்பதாக்க் கூறினாலும் உண்மை அது மட்டும்தானா?
உணவு பாதுகாப்பு மற்றும் தரசசட்டம் இல்லை. அது மட்டுமே இல்லை.
இங்கே தான் The food safety and Standards of India Act வருகிறது.
ஒரு பொருள் உணவுப் பொருளாக விற்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு சில விதிகளும், அதே பொருள் அழகு சாதனப் பொருளாக விற்க வேண்டும் எனில் வேறு சில விதிகளும் உண்டு.
அழகு சாதனப் பொருள் என விற்கப்படுமாயின் அதில் கலக்க அனுமதிக்கப்பட்ட வேதிப்பொருட்கள் மற்றும் அளவுகள் வேறு.
சூரிய காந்தி எண்ணை என விற்கப்படுகிறது. அதுவே தினசரி உணவுக்கான பொரிக்கா தாளிக்க என பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் எந்த அளவுக்கு சூரியகாந்தி விதை உற்பத்தி ஆகிறது எனக் கணக்கிட்டால், சூரியகாந்தி விதை உற்பத்திக்கும், சூரியகாந்தி எண்ணையின் அதீத உற்பத்திக்கும் உள்ள அதிக இடைவெளி புலப்படும்.
கடலை எண்ணை தயாரிக்க நிலக்கடலைப் பருப்பே பயனாகிறது. தோராயக்கணக்காக ஒரு லிட்டர் கடலை எண்ணை தயாரிக்க இரண்டரை கிலோ நிலக்கடலைப் பருப்பு தேவைப்படுகிறது.
ஒரு கிலோ பருப்பு 100 ரூபாய். மொத்தமாக வாங்கினால் 87.5 ரூபாய் விலைக்கும் கிடைக்கலாம். அதாவது ஒரு மூட்டை பருப்பு 7000 ரூபாய் வரை ஆகிறது. இது 80கிலோ கொண்டது.
இந்த கடலைப்பருப்பானது மில்லில் உடைத்த்தாகவும் கிடைக்கும். அதைக் காய வைக்க வேண்டும். 80 கிலோ பருப்பு காய வைத்த்தும் 75 கிலோவாக சுண்டிவிடும்.
கடலையை ஒவ்வொரு முறையும் ஓரிட்த்திலிருந்து வேறிட்த்திற்கு கொண்டு செல்ல ஆகும் செலவு ஒரு லிட்டர் கடலை எண்ணை தயாரிப்பில் 5 ரூபாய் வரை ஆகிறது.
செக்கில் வைத்து ஆட்ட ஒரு கிலோ பருப்புக்கு பத்து ரூபாய். 80கிலோ எண்ணை ஆட்டப்பட்டால் அதிலிருந்து 30 கிலோ எண்ணையும் 48 கிலோ புண்ணாக்கும் கிடைக்கிறது. அந்த புண்ணாக்கு ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை போகும்.
ஆக தோராயக்கணக்காக ஒரு லிட்டர் கடலை எண்ணை தயாரிக்க ஆள் கூலி செலவு சேர்த்து 240 ரூபாய் வரை உற்பத்திச் செலவு ஆகிறது. இதில் பாட்டிலில் அடைப்பது, எண்ணை விற்க விளம்பரங்கள், பத்திரப்படுத்த இடம் செலவு இவை எதுவும் சேர்க்காமல் சுத்தமான கடலை எண்ணை தயாரிக்க ஆகும் செலவு.
இது இப்படி இருக்க விளம்பரப்படுத்தப்பட்டு வரும் கடலை எண்ணைகள் 150 ரூபாய் முதல் 175 ரூபாய் வர ஒரு லிட்டர் விற்பனை ஆகிறது. இது உணவாகப் பயன்படுத்தும் எண்ணை.
தேங்காய் எண்ணை தயாரிக்க தேங்காய் கொப்பரை பயனாகும். 17 கிலோ கொப்பரை பயன்படுத்தி ஆட்டினால் பத்து லிட்டர் எண்ணை கிடைக்கும்.
இதில் தலைக்கு தடவும் எண்ணை ஒரு விலையும், உள்ளுக்கு உணவாகப் பயன்படுத்தும் தேங்காய் எண்ணையும் வெவ்வேறு விலையில் விற்பதையும் பார்க்க முடிகிறது.
இதேதான், விளக்கெண்ணைக்கும். விளக்கெண்ணை என்பது கொட்டைமுத்துவில் இருந்து அப்படியே செக்கில் ஆட்டிக் கிடைப்பதில்லை. ஆட்டிய பிறகு அதை நீர் சேர்த்து கொதிக்க வைத்து பின் அதிலிருந்து தேன் நிறத்தில் இருக்கும் விளக்கெண்ணையைப் பிரித்தெடுக்க வேண்டும். விளக்கெண்ணையை விளக்குக்கே பயன்படுத்துவதால், உடலுக்கு உள் சென்று தீதொன்றும் விளைவிக்காது என எண்ணி அந்த எண்ணையில் வாசனைத் திரவியங்கள் சேர்த்து விளக்குக்கான கூட்டு எண்ணை என விற்கப்படுகிறது.
விளக்குக்கான கூட்டு எண்ணை என்பது விளக்கெண்ணை, நல்லெண்ணை, பசு நெய், சேர்ந்த்து. இவை அனைத்தும் உணவாகவும் பயன்படுபவை. இந்த எண்ணைகளின் கூட்டு (சதவீதக் கணக்கோடு) விலைக்கும், சேர்த்தே விற்கும் கூட்டு எண்ணை விலைக்கும் உள்ள வித்தியாசம் என்பது மிக மிக அதிகமாகவே உள்ளது. அந்த வித்தியாசமே அவர்களின் லாபம். நமக்குக் கேடு.
நல்லெண்ணை தயாரிக்க அத்தோடு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்கப்படுகிறது. இதற்கு காரணம் அதைச் சேர்த்தால்தான் எள்ளில் இருந்து எண்ணை பிழியப்படும். ஒரு மூட்டை எள்ளுக்கு ஒரு கிலோ வெல்லம் சேர்க்க வேண்டும். இதில் பிண்ணாக்கும் அதிகம் கிடைக்காது.
எள் மொத்த விலை கிலோ 90 ரூபாய் தோராயமாக. இரண்டரை கிலோ எள்ளுக்கு ஒரு லிட்டர் எண்ணை. வெல்லச் செலவு, ட்ரான்ஸ்போர்டேஷன், ஆள் கூலி என மற்ற செலவுகளும். உற்பத்திச் செலவு எனப் பார்த்தால் லிட்டர் 240 வரையாவது ஆகிறது.
எள் விலை 90ரூபாய் கிலோ.
விளக்கெண்ணை என விற்கிறார்கள். கூர்ந்து கவனித்தால் சில பாக்கெட்டுகளில் 'உண்ணத்தகுந்த்து அல்ல” எனும் வாசகங்கள் வேறு இருக்கிறது. உண்ணத்தகுந்த விளக்கெண்ணைக்கும், உண்ணத்தகாத விளக்கெண்ணைக்கும் விலையிலும் வித்தியாசம். இரண்டுமே சுத்தமான விளக்கெண்ணை எனில் விலையிலும், பெயரிலும் வித்தியாசம் ஏன்? ஏனெனில், இரண்டும் வெவ்வேறு சட்ட்த்தின் கீழ் வருவதால், அந்தந்த சட்ட வாசகங்களை வெவ்வேறு வகையில் பொருள் கொள்வதன் மூலம், அல்லது வெவ்வேறு பொருள் சொல்வதன் மூலம், வியாபாரிகள் பணம் சம்பாதிக்கிறார்கள்.
இது வரை பார்த்த்து எண்ணை கணக்கு மட்டுமே…
சில உணவங்களில் சாப்பிட நாம் வாங்கிய உணவு அதிகமாக மீந்து போனால், அவற்றை டப்பாக்களில் அடைத்து நாம் வீட்டிற்குக் கொண்டு செல்வதை அனுமதிப்பதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், நேரம் கழித்து உண்பதால் அந்த உணவு கெட்டுப்போயிருந்தால் அதை சாப்பிடுபவருக்கு தீங்கு நேரும் என்பதே.
ஆனால் பெரும்பாலான உணவகங்கள் அப்படி உணவு வெளியே செல்வதை விரும்புவதில்லை. வெளியே கொண்டு செல்ல அனுமதிப்பதும் இல்லை. காரணம், தமது உணவுப் பொருளின் தரத்தின் மீது அவர்களே கொண்ட நம்பிக்கை. (உணவகங்களின் உணவுப் பொருட்களின் தரம் இன்னும் வேறு சில தர நிர்ணயங்களுக்கும் உட்பட்ட்து)
சட்டம் என்ன சொல்கிறது?
உணவு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டமோ அல்லது விதிகளோ, ஒரு நாடு ஐக்கிய நாடுகள் சபையின் Codex Alimentarius Commission of the Food and Agriculture Organization, World Health Organization -ன் ஒப்பந்தங்களை ஏற்று கையெழுத்திட்டிருக்கிறதா அல்லது தமக்கென தனி உணவு பாதுகாப்பு, கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டிருகிறதா என்பதைப் பொருத்தே அந்நாட்டில் உணவுப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு சட்டம் அமைகிறது.
இதற்கு முன்பு இந்தியாவின் உணவு குறித்த பாதுகாப்பை நிர்ணயம் செய்யும் சட்டங்களாக The Prevention of Food Adulteration Act 1954, Fruit Products Order 1955, Meat Food Products Order 1973, Vegetable oil products Order1947, Edible Oils Packging Regulation Order 1988, Solvent Extracted Oil De-Oiled Meal and Edible Flour (Control Order 1967, Milk and Milk Products Order 1992 ஆகியவை இருந்தன. The Food Safety and Standard Act 2006 மேற்சொன்ன சட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதாக அதன் பின் எழுந்த்து. உணவு குறித்து ஏற்கனவே இருந்த சட்டங்களும், கட்டுப்பாட்டு அறிவுறுத்தல் விதிகளும், The Food Safety and Standard Act 2006 சட்டம் வந்த பிறகு ஒருங்கே மறைந்தன.
உணவுப் பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்ய எழுந்த இந்த சட்டத்தின் கீழ் வெவ்வேறு துறையின் கீழான, வெவ்வேறு விதிகளை ஒருங்கிணைக்கும் முகமாக The food Safety and Standards Authority of India எனும் அமைப்பு நிறுவப்பட்டு, உணவுப் பொருட்களின் விற்பனையில் அவற்றின் தரத்தை நிர்வகிக்கும் அமைப்பாக அது செயல்படுகிறது. இந்த அமைப்பு உணவு உற்பத்தியையும் அதன் தரத்தை மட்டுமல்லாது, அந்த உணவுப் பொருட்களை பாதுகாப்பது பற்றியும், அவற்றைப் பாதுகாக்கும் பெட்டிகள், குளிர்சாதன வசதி இருக்க வேண்டும் எனில் அதன் தரம், அதற்கான விதிகள் மட்டுமின்றி, அவற்றிற்கான தரச்சான்றிதழ் தரும் நிறுவன்ங்களுக்கான விதிகளையும் செய்கிறது.
அக்மார்க், பி.எஸ்.ஐ., போன்றவை தரச் சான்றிதழ் தரும் நிறுவனங்கள்.
உணவுப் பொருள் விற்பனை, வியாபாரம் செய்ய விரும்புபவர்கள் அந்த உணவுப் பொருள் The Food Safty and Standard Act 2006-ன் கீழ் அமைந்த விதிகளுக்குட்பட்டு உள்ளதா என்பதை கவனத்தில் கொண்டு விண்ணப்பிக்கலாம். அப்படியான விண்ணப்பம் அறுவது நாட்களுக்குள் பதிலிறுக்கப்படும். அதாவது அந்த கால அவகாசத்திற்குள், அதற்கென நியமிக்கப்பட்ட அரசு அலுவலர் நேரிடையாக வந்து அந்த உணவுப்பொருளும், அதன் பேக்கிங்கும், தொழிற்சாலையும் சட்டத்திற்குட்பட்டு நடக்கிறாதா என்பதையும் அவதானித்து சான்றிதழ் வழங்குவார். வழங்கியபின் விண்ணப்பித்தவர் தொழில் துவங்கலாம். அவ்விதம் அறுவது நாட்களுக்குள் பதில் வராவிட்டால், விண்ணப்பித்தவர் அரசு உரிமத்திற்காக்க் காத்திராமல், தமது உணவு வியாபாரத்தைத் தொடங்கலாம். அதாவது, இச்சட்டத்தின் கீழான அந்த அமைப்பு அறுவது நாட்களுக்குள் உரிமைத்தை வழங்க வகை செய்வதே இதன் நோக்கம். அதன் பின் வருடா வருடம் அந்த உரிமத்தைப் புதிப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கான பதிலுக்கான காலக்கெடு முப்பது நாட்கள்.
இச்சட்டத்தின் கீழான குற்ற நடவடிக்கையானது, உரிமையியல் நீதிமன்ற பரவெல்லையின் கீழ் வராது. இச் சட்டத்தின் பகுதி ஒன்பதில் குற்றங்களுக்கான தண்டனை வரைமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளி தண்டிக்கப்படுவது இருக்கட்டும். ஒரே பொருள் உணவுப் பொருளாகவும். அழகுப்பொருளாகவும் வெவ்வேறு சட்ட வரையறையின் கீழ் வருவதாலேயே, அவற்றை வெவ்வேறு பொருட்களாகச் சித்தரித்து, சட்டத்தின் இடுக்குகளுக்குள் புகுந்து வேறு ஒன்றுடன் கலந்து விட்டு, ஆனால் கலப்பட்த்தையே செறிவூட்டியதாக நம்மிடம் விற்பதைப் பற்றி நாம் எப்போது சிந்திக்கப்போகிறோம்?
என்ன செய்யப்போகிறோம்?
-ஹன்ஸா (வழக்கறிஞர்)
legally.hansa68@gmail.com
9994949195

No comments:

Post a Comment