Jul 20, 2016

பாரில் 'ரெய்டு' நடத்த அதிகாரமில்லை: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஓட்டம்

கரூர்: 'டாஸ்மாக் மதுபான பாரில், உணவின் தரம் குறித்து சோதனை நடத்த அதிகாரம் இல்லை' எனக, கூறி, கரூரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஓட்டம் பிடித்தனர்.
கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், நேற்று, கரூர் பஸ் ஸ்டாண்ட் கடைகளில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் சோதனை நடந்தது. அப்போது, காலாவதியான உணவு பொருட்கள், கூல்டிரிங்ஸ் பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் சிலவற்றை, குழுவினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, மீனாட்சிசுந்தரத்திடம் கேட்டபோது, முதலில் பதில் கூற மறுத்துவிட்டார். பின், அலுவல ஊழியர்கள், 'ஏதாவது சொல்லுங்க சார்; இல்லைன்னா நிருபர்கள் விடமாட்டார்கள்' என்றனர். அதன்பின் பதிலளித்த மீனாட்சிசுந்தரம், ''தரமான பொருட்களை விற்க வேண்டும்; காலாவதியான பொருட்களை விற்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். அப்போது, குறுக்கிட்ட நிருபர்கள், 'டாஸ்மாக் மதுபான பாரில், தரம் குறைந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா' என, கேட்டனர். அதிர்ச்சியடைந்த அவர், ''டாஸ்மாக் மதுபான பாரில் சோதனை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் இல்லை; இருந்தாலும் ஆய்வு செய்வோம்,'' என, கூறிவிட்டு, அங்கிருந்து தன் சகாக்களுடன் ஓட்டம் பிடித்தார்.

No comments:

Post a Comment