சர்ச்சைகளைத் தாண்டி மீண்டும் புது அவதாரம் எடுத்துள்ள நூடுல்ஸ் வரிசையில், இப்போது புதிதாக இடம்பிடிக்கிறது பிரெட், பன் மற்றும் பேக்கரி அயிட்டங்கள். உள்ளூர் பொருட்கள் தரமற்றவை, வெளிநாட்டு கம்பெனிகளின் தயாரிப்புகள் தரமானவை என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் அவற்றைச் சாப்பிடுபவர்கள் நம்மில் உண்டு. அவர்களை எச்சரிக்கிறது சமீபத்தில் வெளியான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) ஆய்வறிக்கை.
பொட்டாசியம் ப்ரோமேட், பொட்டாசியம் அயோடைட் உணவு சேர்க்கைகள் பயன்பாட்டை, கனடா, நைஜீரியா, பிரேசில், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்துவிட்டன.
இவை இலங்கை யில் 2001ல், சீனாவில் 2005ம் வருடத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் அனுமதிக்கப்பட்ட உணவுச்சேர்க்கைகள் பட்டியலிலிருந்து நீக்குவதோடு, தடையும் செய்ய வேண்டும் என்ற கருத்து வலுவடைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டதன் பேரில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் டெல்லியில் உள்ள பேக்கரி பொருட்களின் மாதிரிகளில் பொட்டாசியம் ப்ரோமேட் சேர்க்கப்பட்டுள்ளதா என்கிற ஆய்வினை மேற்கொண்டது.
பிரபல நிறுவனங்களான டோமினோஸ், சப்வே, கே.எஃப்.சி., மெக்டோனல்டு போன்றவற்றில் பிரெட், பீட்சா, பர்கர் உள்பட 38 பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில், 84 சதவிகிதப் பொருட்களில் பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடைட் சேர்க்கப்பட்டுள்ளதாக விரிவான அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இது பற்றிப் பேசுகிறார் தேசிய வேளாண் நிறுவன தலைமை அறிவியலாளரான ஜே.சாய்பாபா...‘‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பின் (IARC) அறிவுறுத்தலின்படி மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட பொட்டாசியம் ப்ரோமேட், பிரிவு 2Bல் இருப்பதாகவும், பொட்டாசியம் அயோடைட் கலந்திருப்பதையும் தன் அறிக்கையில் கூறியுள்ளது.
உணவுப் பொருட்களைப் பொறுத்தவரையில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளவற்றை 2A என்றும், ஓரளவு வாய்ப்பு உள்ளவற்றை 2B என்றும் வகைப்படுத்தி வைத்துள்ளனர். அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கையில் 2B பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டிருப்பதால் அபாயமில்லை.
நம் நாட்டில், 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயசட்டத்தின் அறிக்கைகள் 2011 முதல் நடைமுறைக்கு வந்தன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்கீழ் பால் பொருட்கள், உணவுச்சேர்க்கைகள் போன்று உணவுப் பொருட்களின் ஒவ்வொரு பிரிவின் கீழும் உணவு வல்லுனர் குழு உள்ளது.
இக்குழு தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். உதாரணமாக 1954ல் 16 வகை நிறமூட்டிகள் உணவுப்பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போதோ இந்த நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி 8 வகை நிறமூட்டிகளே பயன்பாட்டில் உள்ளன. தொடர்ச்சியான அவர்களின் ஆராய்ச்சியின் கீழ் பல பொருட்கள் தடை செய்யப்பட்டு வந்திருக்கின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி Acceptable Daily Intake (ADI) என்று சொல்லக்கூடிய அளவில்தான் வேதிப்பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன. இதன்படியே பொட்டாசியம் அயோடைட் வேதிப்பொருளை பேக்கரி பொருட்களில் சேர்க்கிறார்கள்.
பொதுவாக நம் நாட்டில் அயோடின் சத்துக் குறைபாடுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு கூடுதலாக 15-30cc அளவில் அயோடின் மாத்திரைகள் கொடுக்கும் போது, குறைந்த அளவில் பொட்டாசியம் அயோடைட் கலந்த உணவுப்பொருள் சாப்பிடுவதில் ஆபத்தில்லை.
100 கிலோ எடையுள்ள ஒருவர் ஒருநாளில் 200 மில்லிகிராம் பொட்டாசியம் அயோடைட் சேர்த்துக்கொள்ளலாம். அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கொடுத்துள்ள அறிக்கையின்படி பார்த்தால், பொட்டாசியம் அயோடைட் சரியான அளவிலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது.
அளவை பெரிதாக்கவும், மிருதுத்தன்மை மற்றும் பூஞ்சைப் பிடிக்காமல் இருக்கவும் பிரெட், பன் போன்றவற்றில் பொட்டாசியம் ப்ரோமேட் சேர்க்கிறார்கள். இது அங்கீகரிக்கப்பட்ட நிலையான 1 கிலோவுக்கு 20 மில்லிகிராம் என்ற அளவிலிருந்து சற்று கூடுதலாக 22 மில்லிகிராம் அளவிலேயே உள்ளது. எனினும், எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் பேக்கரி பொருட்களில் சேர்க்கப்படும் உணவுச் சேர்க்கைகளால் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனிதர்களின் நீண்ட காலப் பயன்பாட்டில் புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளது. இவ்விஷயத்தில் உணவு வல்லுனர் குழு தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளின் ஆராய்ச்சிகளோடு ஒப்பிட்டு, அபாய நிலையில் இருக்கும் பட்சத்தில், உணவுப் பாதுகாப்பை முக்கிய காரணியாக எடுத்துக் கொண்டு கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். மற்ற நாடுகளைப் போலவே இந்தப் பொருட்கள் நம் நாட்டிலும் தடைசெய்யப்படும். உள்ளூர் பேக்கரிகளில் பொட்டாசியம் ப்ரோமேட்டின் உபயோகம் அதிக அளவில் இல்லை என்பதால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை” என்கிறார் சாய்பாபா.
அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் உதவி தலைமை பேராசிரியரும், புற்றுநோய் நிபுணருமான டாக்டர் விதுபாலாவிடம் பேசினோம்.‘‘பொதுவாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மாதிரிகளின் ஆதாரங்களை வைத்து தரம் பிரிக்கிறார்கள். புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் விலங்குகளிடத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்கிறோம்.
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் பொட்டாசியம் ப்ரோமேட் சேர்க்கப்பட்ட பேக்கரி பொருட்களை எலிகளுக்கு கொடுத்து ஆய்வு செய்ததில் ஆண் மற்றும் பெண் எலிகளிடத்தில் புற்றுநோய்க்கான வெளிப்பாடுகள் இருப்பதையும், பெண் எலிகளிடத்தில் தைராய்டு பிரச்னை மற்றும் எடை கூடுதல் மற்றும் இனப்பெருக்க குறைபாடு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மையத்தினர் 1981 முதல் 1983 வரையிலான காலகட்டத்தில் மேற்கொண்ட சர்வே முடிவில், பொட்டாசியம் ப்ரோமேட் வேதிப்பொருள் உற்பத்தி ஆலைகளில் வேலை செய்யும் சுமார் 27 ஆயிரம்
தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மனிதர்களிடத்தில் வேதிப்பொருட்களை நேரடியாக செலுத்தி சோதனை மேற்கொள்ள இயலாது. தொடர்ந்து இதுபோன்ற பொருட்களை உபயோகிப்பவர்கள், உபயோகிக்காதவர்களை ஆய்வுக்கு உட்படுத்தும் நீண்ட கால சோதனைக்குப் பின்தான் உறுதி செய்ய முடியும். அதனால், முன்னெச்சரிக்கையாக இருப்பதில் தவறொன்றும் இல்லையே!
ஆய்வகங்களில் ஆக்ஸிஜனேற்றத்துக்கும் வேதிப்பொருள் கலவைகள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளான பொட்டாசியம் ப்ரோமேட்டை உணவுப்பொருளில் கலந்தால் அதன் விளைவு என்னவாகும்? இப்போது பலர், ‘எனக்கு புகைபிடிக்கும் பழக்கமே இல்லை. புற்றுநோய் எப்படி வந்தது’ என்று சொல்லக் கேட்கிறோம்.
நம்மை அறியாமல் உணவுப்பொருட்களில் கலக்கப்படும் இதுபோன்ற வேதிப்பொருட்களால் புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறோம். பெருநகரங்கள் மட்டுமல்ல... குக்கிராமங்களில்கூட நாகரிக மோகத்தில் இதுபோன்ற உணவுகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
கேக் இடம் பெறாத பர்த்டே பார்ட்டிகளோ, கொண்டாட்டங்களோ இல்லை. பிறந்த நாளன்று ஏதும் அறியாத குழந்தைக்கு விஷம் கலந்த கேக்கை தாயே ஊட்டிவிடும் பரிதாபத்தை என்னவென்று சொல்வது?’’ என்கிறார் விதுபாலா.
“பிரெட், பன், பீட்சா போன்ற மைதாவினால் செய்யப்படும் பொருட்கள் உடல்நலத்துக்குக் கேடானவை என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை” என்கிற டயட்டீஷியன் கோமதி கவுதம், இப்போது அதன் மிருதுத்தன்மைக்காக சேர்க்கப்படும் உணவுச் சேர்க்கைகளின் விபரீதங்களையும் பட்டியலிடுகிறார்...
``சாதாரணமாக முதல் நாள் இரவு தோசை, சப்பாத்தி போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் போது மறுநாள் காலையில் மலம் வெளியேறுவதில் சிரமங்கள் இருக்காது. அதுவே பிரெட், பர்கர், பீட்சா, பாவ்பாஜி போன்ற கடினமான பொருட்களைச் சாப்பிடுவதால் மலம் வெளியேற்றுவதில் சிரமங்கள் ஏற்படுவதை உணர முடியும். இவை செரிமானம் ஆவதற்கு கடினமாக இருப்பதால், சிறுகுடலுக்கு அதிக வேலைப்பளுவை கொடுக்கிறோம். உடல் உறுப்புகளின் மேம்பட்ட செயல்பாடுகளுக்கு செரிமான மண்டலம் மிக முக்கிய காரணியாக இருக்கிறது.
பிரெட், பன் போன்றவற்றில் மிருதுத்தன்மைக்காகவும், அளவை அதிகரிப்பதற்காகவும் மைதாவோடு சில உணவுச் சேர்க்கைகளை சேர்க்கிறார்கள். இதில் பொட்டாசியம் அயோடேட் மற்றும் பொட்டாசியம் ப்ரோமேட் வேதிப்பொருட்கள் உள்ளன. இந்திய உணவு மற்றும் தர ஆணையம் அனுமதிக்கப்பட்ட அளவில் இருக்கும் போது பிரச்னை இல்லை. அளவை மீறும் போதுதான் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.
இவை உணவில் உள்ள வைட்டமின் மற்றும் இதர ஊட்டச்சத்துகளை அழிப்பதோடு, தைராய்டு, நரம்புமண்டலப் பாதிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன. சிறுநீர் வெளியேற்றத்தை தடை செய்வதால் உடலில் நச்சுப்பொருட்கள் தங்கிவிடக்கூடும்.
சுவையாகவும் அதே நேரம் சாப்பிட எளிதாக கிடைக்கிறது என்பதற்காக பலர் இப்போது பிரெட் ஆம்லெட், பிரெட் சாண்ட்விச் போன்றவற்றை தினசரி உணவாகவே மாற்றிவிட்டனர். பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, சிறுதானிய உணவுகள் மற்றும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவையே நம் உடலுக்கு உகந்தவை என்பதை உணர வேண்டும்...’’ என்கிறார் கோமதி.
தடைகளும் ஆணைகளும்தான் நம்மை பாதுகாக்க வேண்டுமா? பாதுகாப்பு முயற்சிகளில் நாமே இறங்கலாமே!
கேக் இடம் பெறாத பர்த்டே பார்ட்டிகளோ, கொண்டாட்டங்களோ இல்லை. பிறந்த நாளன்று ஏதும் அறியாத குழந்தைக்கு விஷம் கலந்த கேக்கை தாயே ஊட்டிவிடும் பரிதாபத்தை என்னவென்று சொல்வது?
அளவு மீறி சேர்க்கப்படும் உணவுச் சேர்க்கைகள் வைட்டமின் மற்றும் இதர ஊட்டச்சத்துகளை அழிப்பதோடு, தைராய்டு, நரம்புமண்டலப் பாதிப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படவும் காரணமாகின்றன. சிறுநீர் வெளியேற்றத்தை தடை செய்வதால் உடலில் நச்சுப்பொருட்கள் தங்கிவிடக்கூடும்.
No comments:
Post a Comment