சேலம்: சேலம் சேகோசர்வ் நிறுவனத்தில் இருந்து, கலப்படம் உள்ள ஜவ்வரிசி மூட்டைகளை விற்பனை செய்வதற்கு, உணவு பாதுகாப்பு அதிகாரி தடை விதித்துள்ளார். இதனால், அங்கிருந்து, ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு கொள்முதல் செய்வதை வியாபாரிகள் நிறுத்தியுள்ளனர்.
சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டத்தில், 350க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் உள்ளன. ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் ஆலை அதிபர்கள், அவற்றை, சேகோசர்வ் நிறுவனத்தில் ஒப்படைத்து, ஏலம் அடிப்படையில் பணத்தை பெற்றுகொள்கின்றனர். அங்குள்ள வியாபாரிகள், தரத்துக்கு ஏற்றாற்போல் விலை வைத்து கொள்முதல் செய்கின்றனர். பின், அவற்றை வட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
1,000 மூட்டைகளுக்கு சீல்: ஓராண்டுக்கு முன், வணிகவரித்துறை அதிகாரிகள், சில லாரிகளை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த ஜவ்வரிசி மூட்டைகளை, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா வசம் ஒப்படைத்தனர். அவர் ஆய்வு செய்தபோது, ரசாயன கலப்படம் இருப்பது தெரியவந்தது. பின், சேலம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தார். கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், 50 கிலோ, 90 கிலோ எடையுடைய, 1,000 மூட்டைகள், குடோனிலேயே சீல் வைக்கப்பட்டன. அவை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
கொள்முதல் நிறுத்தம்: வியாபாரிகள் போராடியபோதும், அந்த மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை. கடந்த, 5ம் தேதி முதல், ஜவ்வரிசி கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டனர். அரசு தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் சேகோ மற்றும் ஸ்டார்ச் வியாபாரிகள் சங்க தலைவர் தாராசந்த்சுரானா மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது: எங்களுடைய சங்கத்தைச் சேர்ந்த ஆறு பேருடைய, 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவ்வரிசியை, தரமற்றவை என குறிப்பிட்டு, உணவு பாதுகாப்பு அதிகாரி தடை செய்துள்ளார். ஓராண்டுகளாகியும், அவற்றை எடுக்க முடியவில்லை. மாநில உணவு பாதுகாப்புத்துறை கமிஷனரை சந்தித்து முறையிட்டோம். அவர், ஜவ்வரிசியை விடுவிக்கக்கோரி உத்தரவிட்டார். சேலம் அதிகாரி அதற்கு அனுமதி மறுக்கிறார். அரசு தலையிட்டு, இப்பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். அங்கீகாரம் பெற்ற பரிசோதனை கூடமாக, சேலம் சேகோசர்வை உருவாக்க வேண்டும். கடந்த, 5ம் தேதி முதல், கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரசாயன கலப்படம்: சேலம் உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது: கமிஷனரை பொறுத்தவரை, விதிகளுக்கு உட்பட்டு, ஜவ்வரிசியை அனுமதியுங்கள் என்று தான் கூறியுள்ளார். ஆனால், வியாபாரிகள், 'அவர் உத்தரவிட்டுள்ளார், நீங்கள் ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்' என, கேட்கின்றனர். சில உற்பத்தியாளர்கள், வெளிர்நிறத்துக்காக ரசாயன கலப்பு செய்கின்றனர். மார்க்கெட்டில் அது விற்பனைக்கு ஏற்றதாக உள்ளதால், வியாபாரிகள் அதை விரும்புகின்றனர். ஆனால், பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அதனால் தான், வியாபாரிகள் வைத்திருந்த, 1,000 ஜவ்வரிசி மூட்டைகளுக்கு தடை விதித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment