ஓமலூர்: ஓமலூரில் வெல்லம் தயாரிக்க, கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட, 940 சர்க்கரை மூட்டைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் செயல்படுகிறது. இவர்களில் சிலர், விதிமுறை மீறி, சர்க்கரை மூலம் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான குழுவினர், நேற்று, ஓமலூர் அடுத்த, நாலுகால்பாலம், சர்க்கரைசெட்டிப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற மூன்று மினி லாரிகளை மடக்கி விசாரித்தனர். அவர்கள், கர்நாடகாவில் இருந்து, 240 சர்க்கரை மூட்டைகளை, வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு கொண்டு செல்ல முயன்றது. அதையடுத்து, அந்த சர்க்கரை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, லாரியில் வந்த பன்னீர்செல்வம், குமார், பழனிவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காமலாபுரம் பகுதியில் சோதனையிட்ட போது, அங்கு தனியார் அரிசி குடோனில் வைக்கப்பட்டிருந்த, 700 சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்து, அந்த குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment