Nov 1, 2015

200 லோடு லாரிகளை நிறுத்தி ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

ஆத்தூர்: சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வணிகவரித்துறை அலுவலர்கள், கடந்த, 29ம் தேதி, ஆத்தூர் வட்டார ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் துரைசாமியின் சேகோ பேக்டரியில் ஆய்வு செய்தனர். அப்போது, பணி செய்ய விடாமல் தடுத்து, தரக்குறைவான வார்த்தையால் திட்டிய, சேகோ பேக்டரி உரிமையாளர் துரைசாமி உள்ளிட்ட நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, நேற்று, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா புகார் செய்தார். அதையறிந்த, சேகோ பேக்டரி உரிமையாளர்கள், அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். 
இதில், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, சேலம், ஆத்தூர், ராசிபுரம், நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், ஈரோடு பகுதியில் உள்ள, சேகோ ஆலைகளில், இன்று (1ம் தேதி) முதல், மரவள்ளி கிழங்கு அரவை நிறுத்துவதாக தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று இரவு, 10.30 மணியளவில், ஆத்தூர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் துரைசாமி தலைமையில், 200க்கும் மேற்பட்டோர், ஆத்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா மீது, புகார் தெரிவித்தனர். 
இரவு, 11.30 மணியளவில், ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், 200க்கும் மேற்பட்ட மரவள்ளி கிழங்கு லோடுகளுடன் லாரிகளை நிறுத்தி, சேகோ ஆலை உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன், பேச்சுவார்த்தை நடத்தியபோது, உணவு பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு, 12.30 மணிக்கு மேலும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment