மதுரையில் தரமற்ற ஐஸ்கட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு துறை கண்காணிக்க வேண்டும். தரமற்ற தண்ணீர் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் கட்டிகளால் இகோலை, சால்மோனல்லா கிருமி பாதிப்பு அபாயம் உள்ளது.
மதுரையில் தண்ணீர் விற்பனை செய்யும் 57 பிளான்ட்கள் உள்ளன. நகர் மற்றும் கிராமங்களில் 20 ஐஸ் கம்பெனிகள் மூலம் ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து உற்பத்தியாகும் ஐஸ்பார்கள் மதுரை முழுவதும் உள்ள 2000க்கும் மேற்பட்ட கரும்புச்சாறு, ஜூஸ், சர்பத் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.ஐஸ்பார்கள் பெரும்பாலும் சாக்குத் துணி அல்லது தெர்மோகோல் பெட்டியில் வைத்து கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்கட்டியில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் நிறுவனங்கள் ஐஸ் பார் தயாரிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாத நிலையில் இருந்தால் ஆபத்து தான்.
தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்தாலும் கிருமிகள் தொற்றும் வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற தண்ணீரில் இகோலை, சால்மோனல்லா போன்ற கிருமிகள் இருக்கும். ஐஸ்பார் தயாரிக்கும் போது இக்கிருமிகள் கொல்லப்படுவதில்லை. மாறாக உறைந்து விடுகிறது. மீண்டும் தண்ணீராகும் போது கிருமிகள் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது.குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் மற்றும் ஐஸ்பார்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை, உணவு பாதுகாப்புத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment