Aug 13, 2015

DINAMALAR NEWS

'மேகி நுாடுல்ஸ்' சர்ச்சையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளின் முடிவுகள், வெளியிடப்படாமல் உள்ளன. 'இந்த விஷயத்தில், அரசு மவுனமாக உள்ளது ஏன்?' என, மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உள்ளதை உறுதி செய்த மத்திய அரசு, அவற்றின் விற்பனைக்கு தடை விதித்தது. தமிழகத்தில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அனுமதியை விட, காரீயத்தின் அளவு அதிகமாக இருந்ததால், ஆறு நிறுவனங்களின் நுாடுல்ஸ் விற்பனைக்கு, மாநில அரசு தடை விதித்தது. சென்னை மாவட்ட மாதிரி முடிவுகள் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட, 'நுாடுல்ஸ்'சின், 65 மாதிரி முடிவுகள், இரு மாதங்களாகியும் இன்னும் வெளியிடப்படவில்லை. 
மாநிலம் முழுவதும், சிப்ஸ் முதல் பஞ்சாமிர்தம் வரை, 20க்கும் மேற்பட்ட பொருட்களின், 2,000க்கும் மேற்பட்ட மாதிரிகள், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இரு மாதங்களாகியும், முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 'மாதிரி முடிவுகள் குறித்து, வாய் திறக்கக் கூடாது என, அரசு கிடுக்கிப்பிடி போடப்பட்டு உள்ளதால், முடிவுகள் இன்னும்வரவில்லை' என, மாவட்ட நியமன அலுவலர்கள் சமாளித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரண்டு மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டவை, சட்ட ரீதியான மாதிரிகள் அல்ல; சோதனை மாதிரிகள் என, அதிகாரிகள் சமாளித்து வருகின்றனர். உள்ளூர் அதிகாரிகளால் கசிந்த இத்தகவல், அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. எனவே, 'மாதிரி முடிவுகளை, மாவட்ட அதிகாரிகள் வெளியிடக் கூடாது; உணவு பாதுகாப்புத் துறை கமிஷனருக்கு, நேரடியாக அனுப்ப வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், மாதிரி முடிவுகள் கிடைத்தாலும், அதை வெளியில் கூற முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
'மாதிரி முடிவுகள் அடிப்படையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவித்த மாநிலஅரசு, முடிவுகளை, அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மாதிரிக்கான பொருட்கள்:
சிப்ஸ் வகைகள், மசாலா பவுடர், பால் பவுடர், சமையல் எண்ணெய், நெய், ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, பழங்கள், பதப்படுத்திய காய்கறிகள், உப்பு, குளிர்பானங்கள், பாட்டில், கேன் குடிநீர், ஊறுகாய், பஞ்சாமிர்தம், ரெடிமேட் வத்தல் குழம்பு, கறிவேப்பிலை பொடி பேஸ்ட், சில்லி - சாஸ் வகைகள் உட்பட, உணவு பாதுகாப்புத் துறையினரால், 20க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டன.
அரசால் தடை செய்யப்பட்டவை:
மேகி நுாடுல்ஸ், வாய் வாய் எக்ஸ்பிரஸ் நுாடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், ஸ்மித் அண்டு ஜோன்ஸ் சிக்கன் மசாலா நுாடுல்ஸ், கிரைன் சக்தி வெஜ் ஆட்டா நுாடுல்ஸ், நியூ எக்ஸ்ட்ரா டெலிஷியஸ் சிக்கன் நுாடுல்ஸ் என, ஆறு நிறுவன நுாடுல்ஸ் தயாரிப்பு, விற்பனைக்கும் தமிழக அரசு, ஜூன் மாதம் தடை விதித்தது.

No comments:

Post a Comment