மேகி விவகாரத்தில் அரசு எழுப்பிய கேள்விகளுக்கு நெஸ்லே இன்னமும் பதில் அளிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்தார்.
மேகி நூடுல்ஸில் காரீயமும், மோனோசோடியம் குளூட்டமேட்டும் அதிகம் இருந்தது நிரூபிக்கப்பட்ட நிலையில் நெஸ்லே நிறுவனத்தின் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் கடைகளிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
மேகியில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் அதிகம் இருந்ததற்கான காரணங்களை அரசு கேட்டதாகவும் அதற்கு நெஸ்லே நிறுவனம் இன்னமும் பதிலளிக்கவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேகி நூடுல்ஸ் ஒரேபடித்தான வழிமுறைகளில் சோதனை செய்யப்பட்டது என்றும், நெஸ்லே நிறுவனம் கூட அந்த சோதனை வழிமுறைகளை ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
"கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் செய்யப்பட்ட சோதனைகள் தோல்வியடையவில்லை. நெஸ்லேயின் கோவா கிளையிலிருந்து மேகி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனவே, நெஸ்லேயின் சில உற்பத்திக் கிளைகளில் உயர்ந்த உற்பத்தித் தரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில கிளைகளில் தரம் இல்லை. இன்னும் கடுமையான கண்காணிப்பை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
உணவுப்பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் இல்லை, ஆனாலும் தொழிற்துறையும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, பிரிட்டனிலும் மேகி சோதனை செய்யப்பட்டது, ஆனால் எந்த முறையில் அங்கு சோதனை செய்யப்பட்டது என்பதை நெஸ்லே பகிர்ந்துகொள்ளவில்லை.
நாட்டில் தற்போது 78 அரசு சோதனை மையங்களும் 88 தனியார் சோதனை மையங்களும் உள்ளன. மேலும் சிறந்த சோதனை மையங்களை உருவாக்குவதில் அரசு திட்டவட்டமாக உள்ளது.
உணவுப் பாதுகாப்பு தரநிலைகளைக் கடைபிடிக்கும் எந்த ஒரு புதிய பிராண்டுக்கும் எந்த வித தடையும் இல்லை” என்றார் சுகாதார அமைச்சர் நட்டா.
No comments:
Post a Comment