இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டு, விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு விட்டது. அதை கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளில் விற்பனை செய்துவந்த ஒருசில பெரு நிறுவன அங்காடிகள் தாமாகவே முன்வந்து, அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு அரசுகள் அளவிலான உத்தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை எனினும், 'வாய்மொழி உத்தரவுகள்' பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மேகியில் கன உலோகங்களும் மற்ற நச்சுப் பொருட்களும் அனுமதிக் கப்பட்ட அளவினை விட அதிகம் இருந்ததா இல்லையா என்ற விவாதத் திற்குள் நான் போக விரும்பவில்லை. இந்த விவகாரத்தால் விளைந்த நன்மை என்று பார்க்கையில், மக்கள் 'பாதுகாப்பான உணவுகளை'ப் பற்றி ‘பேச’ ஆரம்பித்துள் ளனர். படிக்காதவர்கள் கூட, பைகளில் அடைக்கப் பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தைப் பற்றிப் பேசுகின்றனர்.
ஆனால், எனது வினாக்கள், "இப்போது அனைத்தும் சரியாகிவிட்டதா? இனி நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அத்தனையும் சத்துக்கள் மட்டுமே நிறைந்த, நச்சுக் கலக்காத பண்டங்களாகி விட்டனவா?" என்பவையே! ஏனென்றால், நாம் விஷங்கள் தோய்ந்த உணவை உண்ண ஆரம்பித்து ஆண்டுகள் பலவாய் நீண்டு விட்டன! இன்றைக்கு ஒரு நூடுல்ஸ் வகையைத் தடை செய்ய முனைப்பு காட்டிய ஆட்சியாளர் களும், அதிகாரிகள் வர்க்கமும் இந்த பிரச்சினையை அறிந்தும் அறியாமல் இருக்கின்றனர் என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால், அரசுகளின் திட்டங்கள் சிலவும் இந்த உணவுகள் நஞ்சாவதை ஊக்குவிக்கின்றன என்றே சொல்லலாம். அது எப்படி?
கீரை வகைகள் பல்வேறு சத்துக்களைக் கொண்டவை என்று எல்லா தரப்பினராலும் விரும்பி உண்ணப் படும் ஒரு காய்கறி. ஆனால், இந்தக் கீரைகளின் உற்பத்தி எப்படி, எங்கு நடக்கின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பெரும்பாலும் கீரைகள் நகர்ப்புறங்களுக்கு மிக அருகாமையில் உள்ள நிலங்களி லேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏனெனில் கீரைகள் அறுவடை செய்த சில மணி நேரங்களிலேயே வதங்கிவிடும் என்பதால், உடனடி விற்பனை என்பது மிக அத்தியாவசியமானது.
நகர்ப்புறங்களில் மங்காத தேவையும், குன்றாத விற்பனையும் இருக்கின்ற காரணத்தால் கீரைகள் நகரங் களுக்கு அருகில் மிக அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆனால், நகர்ப்புறங்களுக்கு அருகினில் விளைவிக்கப்படும் கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளில் கன உலோகங்கள் அதிகம் இருப்பதாகப் பல்வேறு பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உதாரணத்திற்கு, சற்றொப்ப ஒரு மாமாங்கத்திற்கு முன்னர், தில்லிக்கு மிக அருகில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளைப் பார்ப்போம். இந்த ஆய்வு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு, தில்லிக்கு வெளியில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படும் ஐந்து முக்கிய இடங்களில், வெண்டை, காலிஃப்ளவர் மற்றும் பசலைக் கீரை ஆகிய மூன்று முக்கியமான காய்கறிகளின் மாதிரிகளைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் சேகரித்து, அவற்றில் காரீயம், தாமிரம், துத்தநாகம், மற்றும் நீலீயம் (காட்மியம்) ஆகிய கன உலோகங்களின் அளவினை கணக்கிட்டது. அவற்றுள் 72 விழுக்காடு பசலைக்கீரை மாதிரிகளில் காரீயத்தின் அளவு, இந்திய உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவான ஒரு கிலோவிற்கு இரண்டரை மில்லிகிராம் என்ற அளவினை மிகுந்திருந்தது.
இந்த இடத்தில் இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள காரீயத் தின் அளவானது, சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட அளவான கிலோவிற்கு 0.3 மி.கி. உடன் ஒப்பிட் டால், சற்றொப்ப ஏழு மடங்கு அதிகமாகும். அப்படிப் பார்த்தால் அனைத்து பசலைக்கீரை மாதிரிகளிலுமே அனுமதிக்கப்பட்ட அளவினைவிட காரீயம் மிகுந்திருப்பது தெளிவாகின்றது.
நீலீயத்தின் அளவு, இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே (1.5 மி.கி/கிகி) இருப்பினும், ஐரோப் பிய ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுடன் (0.2 மி.கி/கிகி) ஒப்பிடுகையில், சற்றொப்ப எழுபது விழுக் காடு பசலைக்கீரை மாதிரிகளில் நீலீயத்தின் அளவும் அதிகமே! இந்த ஆய்வின் முடிவு, ஒருபானை சோற் றுக்குப் பதம் பார்க்க எடுக்கப்பட்ட ஒரு பருக்கை மட்டுமே! அதற்குப் பின்னர் கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ இது போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன.
இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்; இந்த கன உலோகங்கள் பிரச்சினை ஏதோ இந்தியாவில் மட்டுமே இருப்பதன்று. பல வளரும் நாடுகளிலும் (உ-ம்: இந்தோனேசியா, எத்தியோப்பியா, தான்சானியா) உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் கன உலோகங்களின் கலப்பு உள்ளது.
விவசாய பொருட்களின் உற்பத்தியில் இன்னோர் அரக்கன் - பூச்சிக்கொல்லிகள்! காய்கறிப் பயிர்கள் பலவற்றின் உற்பத்தியிலும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மிக அதிகம்! உதாரணத்திற்கு, தொண்ணூறு களின் இறுதியில் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளைப் பார்க்கலாம். கர்நாடகம் தக்காளி அதிகம் பயிரிடும் மாநிலங்களில் ஒன்று. தக்காளியில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்க ஒருசில விவசாயிகள் ஐம்பது முறைகூட பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதாக அந்த ஆய்வு கூறுகின்றது.
நாங்கள் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கர்நாடகம், குஜராத் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங் களில் முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் பயிரிடும் விவசாயிகளிடம் நடத்திய ஓர் ஆய்வில், அவர்கள் எக்டருக்குப் பதினொன்று முதல் இருபத்து மூன்று கிலோ பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பது தெரியவந்தது. அப்படியானால் இந்தப் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு எந்தளவிற்கு, விற்பனைக்கு வரும் காய்கறி களில் நிலைத்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இது ஏதோ இந்தியாவில் மட்டுமே நிலவும் பிரச்சினை அல்ல... வங்கதேசத்தில் ஒரு எக்டர் கத்தரிக்காய்க்கு 180 முறை, அதாவது தினந்தோறும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் கொடுமை நடந்திருக்கின்றது.
பிலிப்பைன்ஸில் ஒரு எக்டர் கத்தரிக்காய்க்கு, சுமார் 41 லிட்டர் பூச்சிக்கொல்லிகளைக் கூட தெளித்துள் ளனர். ஆக பெரும்பாலான நாடுகளில் மக்கள் விஷம் தோய்ந்த உணவுப் பண்டங்களைத்தான் உட்கொள் கின்றனர்.
இப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத நச்சுக்களை யார் கண்டுபிடிப்பது? எந்த அரசு அமைப்பாவது தொடர்ந்த இடைவெளிகளில் காய்கறி மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்கின்றதா? ஏதோ அங்கொன்றும் இங் கொன்றுமாக நடக்கும் ஆய்வுகளே அவற்றை வெளியுலகத்திற்குக் காட்டுகின்றன. ஆனால் பெரும்பாலான அரசுகள் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. அதைவிட கொடுமை, வேளாண் இடுபொருட்களான வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் அரசுகளே கூட வழங்குகின்றன.
நச்சுத்தன்மையற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய சம்மந்தப்பட்ட துறைகள் எந்த முன்னெடுப்பையாவது மேற்கொண்டுள்ளனவா? “வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் குறிப்பிட்ட அளவிற்குத்தான் பயன்படுத்த வேண்டும்; இந்தளவிற்கு மேல் பயன்படுத்தினால் பலன் ஏதும் கிட்டப் போவதில்லை; மாறாக பணவிரயத்துடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், நாம் உண்ணும் உணவும் நஞ்சாகும்” என்பதனை என் றைக்காவது, முறையாக விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்களா?
இன்றைய சூழலில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப உணவுப் பண்டங்களை விளைவிக்கும் சூழலில் விவசாயிகள் உள்ளனர். அதனால், அதிக விளைச்சலே அவர்களது நோக்கம். கொஞ்சம் கூட, தங்களது விளைபொருட்களை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதால் இழக்க அவர்கள் விரும்புவதில்லை. எனவேதான் அதிகளவில் வேதி இடுபொருட்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், தம் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசும், வேளாண் பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் என்ன செய்திருக்க வேண்டும்? வேதி இடுபொருட்களுக்கு மாற்றான இயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும், பூச்சி விரட்டிகளையும் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவித்திருக்க வேண்டாமா?
சுமார் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே இதுபோன்ற சில ஆராய்ச்சிகள் மட்டுமே முன்னெடுக்கப் பட்டன. ஒருசில நல்ல உயிரியல் பூச்சிக்கொல்லிகளும், இனக்கவர்ச்சிப் பொறிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை முறையாக வணிகப்படுத்தப்படவில்லை. ஆராய்ச்சிகளில் விளையும் பொருட்கள், ஆய்வுக்கூடங்களை விட்டு வெளியேறி, சந்தைக்கு வந்தால் ஒழிய அந்த கண்டுபிடிப்புகளின் நோக்கம் முற்றுப் பெறுவதில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், வேளாண்துறை, கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்துவதில் பின்தங்கியே உள்ளது. இதற்கு அரசுகளும் ஒரு காரணம்.
இதுபோன்ற சுற்றுச் சூழலுக்கேற்ற, விடமற்ற உணவுப்பொருட்களை விளைவிக்க ஏதுவான கண்டுபிடிப்பு களைச் சந்தைக்குக் கொண்டுவர இசைவான கொள்கைமுடிவுகளை எடுக்க வேண்டும். அந்த தொழிலில் ஈடுபட நாட்டமுள்ள நிறுவனங்களுக்கு உரிய உதவிகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டும். இயற்கைக்கு ஒத்திசைவான இடுபொருட்களை மானியவிலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு நடக்குமானால், படிப்படியாக சில ஆண்டுகளிலேயே இதுபோன்ற இடுபொருட்கள் சந்தையில் சகஜமாக புழக்கத்திற்கு வந்துவிடும்.
விவசாயிகளும் அவற்றை அதிகளவில் பயன்படுத்துவர். அதைவிடுத்து, அதுபோன்ற ஆராய்ச்சிகளும் அதிகம் நடக்காமல், அதுபோன்ற இடுபொருட்களும் சந்தையில் அதிகளவில் இல்லாதபோது, விவசாயி களிடம் சென்று, வேதி இடுபொருட்களைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொன்னால், அவர்கள் எப்படி காதுகொடுத்து கேட்பர்? ஏற்கனவே நட்டத்தில் இருக்கும் வேளாண் தொழிலில் அவர்களும் கொஞ்சமேனும் இலாபம் ஈட்டத்தானே முயலுவார்கள்? இருப்பினும், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக விவசாயிகள் இயற்கைக்கு இசைவான இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்ய முனைகின்றனர்.
ஆனால் இந்த முன்னெடுப்புகள் பல்கிப் பெருக வேண்டுமானால், அரசும், வேளாண் பல்கலையும், வேளாண் துறையும் அதிக முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, கன உலோகங்கள் கலந்த எத்தனையோ பொருட்கள் இன்று மனித வாழ்வில் பயன்பாட்டில் உள்ளன.
அவற்றின் கழிவுகள் மண்ணி லும், நீரிலும்தான் நிறைகின்றன. அதுபோன்ற நிலத்தில் விளையும் பொருட்களிலும், அது போன்ற நீரி னைப் பயன்படுத்தி உருவாகும் பொருட்களிலும், கன உலோகங்களின் கலப்பு அதிகமாகத்தான் இருக்கும். எனவே மேலை நாடுகளில் இருப்பதைப் போன்று, கழிவுகள் மேலாண்மை முறையாகச் செய்யப்படாதவரை, இந்த பிரச்சினைகள் எழுவது தவிர்க்க இயலாததே!
இறுதியாக, நுகர்வோர்களும் விழிப்புடன் இருத்தல் அவசியம். ஏதோ சமைத்தோம், எதையோ சாப்பிட் டோம் என்றில்லாமல், உணவுப்பண்டங் களைத் தெரிவு செய்து வாங்குவதில் தொடங்கி சமைத்து உண்பது வரை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நுகர்வோர் கொடுக்கும் அழுத்தம், விவசாய உற்பத்தியாளர்களைச் சரியான உற்பத்தி முறை களைப் பின்பற்றச் செய்யும். இந்த உற்பத்தி மற்றும் நுகர்வுச் சங்கிலியில், தனியார்துறை என்னும் கண்ணியின் பங்கெடுப்பும் இருக்குமானால், நலம் மிகு உணவுப்பண்டங்களின் உற்பத்தியும், நுகர்வும் எளிதில் சாத்தியமாகும்.
ஆக, ஒருங்கிணைந்த முன்னெடுப்புகளைச் செய்யாவிட்டால், நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் பல வற்றிலும் தேவையற்ற நச்சுப் பொருட்களின் கலப்பு இருப்பதைத் தவிர்க்க இயலாது. ஏதோ ஒரு நூடுல் ஸை மட்டும் தடை செய்துவிட்டு, இனியெல்லாம் நமக்கு நலம்தான் என்றிருந்தால், பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போலத்தான்!
True picture of farm to fork concepts highlighted for corrective action
ReplyDeleteTrue story and i want to share here about actual happens in Sago Industries and FSSAI. FSSAI officers declared themselves in a meeting conducted few weeks ago against Test report upon samples forwarded to Lab that 19 out of 19 Samples found or Traced 9 Heavy metals beyond what they found in Maggi. But no action against till date and if they check MSG too will be there as per my view.
ReplyDelete