உணவு விழிப்புணர்வுத் தொடர் 21
நம் வீட்டு கிச்சனிலிருந்து நாம் ஒவ்வொருவரும் எப்படி கிளினிக்கிற்கு அனுப்பப்படுகிறோம் என்று ஆராய்ந்து வருகிறோம். ரசாயனக் கலப்படம் உள்ள எல்லா உணவுகளையும் ஒவ்வொன்றாக அறிந்து கொண்டால், அதன்பின் நாம் சாப்பிடுவதற்கு எதுவும் மிஞ்சாது. அந்த அளவிற்கு அன்றாட உணவுப் பொருட்கள் ஆபத்தானவையாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமானவற்றை மட்டும் நாம் பார்த்து வருகிறோம்.
இந்த வரிசையில் இப்போது நாம் பார்க்கப்போவது - பிராய்லர் கோழி. ‘இது மிகவும் ஆபத்தானது’ என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லப் போவதில்லை. ‘இது ஏன் ஆபத்தானது?’ என்ற கேள்வியோடு ஆராய்வோம்.நெரிசலான பண்ணைகளில் அடைத்து வைத்து கோழிகளை வளர்க்கிறார்கள். இதனால் எந்த நோயும் இந்தக் கோழிகளில் விரைந்து பரவும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக ஏராளமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் இந்த பிராய்லர் கோழிகளுக்குத் தரப்படுகின்றன. இந்த மருந்துகளின் எச்சத்துடனே நாம் சிக்கன் சாப்பிடுகிறோம். எனவே ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் நம் உடலுக்குள்ளும் ஊடுருவுகின்றன. இதனால் எதிர்காலத்தில் ஏதோ நோய்க்காக ஆன்ட்டி பயாடிக் சாப்பிடும்போது அது முறையாக நோயை எதிர்க்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கென் பல்கலைக்கழக ஆய்வுகள், ‘பிராய்லர் கோழியின் உடல் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசி, மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் தன்மை வாய்ந்தது’ என்று கூறுகின்றன.‘பிராய்லர் கோழியை உணவாகத் தொடர்ந்து உட்கொள்ளும் இந்தியர்களில் நூற்றில் 65 பேருக்கு கல்லீரல் வீக்க நோய் இருக்கிறது’ என சென்னையில் இயங்கும் மருத்துவ ஆய்வுக்குழு ஒன்றின் குடல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிராய்லர் சிக்கனால் ஏராளமான நோய்கள் வருகின்றன என்பது பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரியும். ஆனாலும் அதிக அளவில் நாம் உண்ணும் பிரதான உணவாக இன்று திகழ்வது பிராய்லர் சிக்கன்தான். ஆய்வு முடிவுகளும் அறிவிப்புகளும் ஒரு பக்கம் இருக்கட்டும்... உண்மையிலேயே பிராய்லர் சிக்கனால் ஏன் ஆபத்து உருவாகிறது?முதலில் நாம் சாப்பிடும் முறை. நமக்கு முந்தைய தலைமுறையினர் எப்போது உணவு சாப்பிடுவார்கள்?
அவர்களுக்கு பசி ஏற்படும்போது சாப்பிடுவார்கள். உணவு உண்பது என்பது ஒரு வழிபாடு போல அப்போது இருந்தது. நாம் எப்படி சாப்பிடுகிறோம்? டேபிள் மேனர்ஸ் என்ற பெயரில் பசி இருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் மதிக்காமல் கூட்டம் கூட்டமாகச் சாப்பிடுகிறோம். சாப்பிடுவது என்பது ஏதோ திருவிழா போல இப்போது ஆகிவிட்டது.
இப்படிப் பசியில்லாமல் நாம் சாப்பிடுகிற உணவு நல்ல உணவாக இருந்தால் கூட, உடலால் முழுமையாகச் செரிக்க முடியாமல் அவை கழிவுகளாக மாறும். நல்ல உணவே இப்படி மாறும் என்றால் பிராய்லர் சிக்கன் போன்ற ரசாயன உணவுகளைப் பசியின்றிச் சாப்பிட்டால் என்ன ஆகும்?
இரண்டாவது பிரச்னை - சாப்பிடும் அளவு. ஒவ்வொருவரும் அவரவருக்குத் தேவையான அளவிற்கு சாப்பிடுவதுதானே சரியானது! ஆனால் நாம் என்ன அப்படியா சாப்பிடுகிறோம்? சாதாரண உணவுகளையே உடலின் தேவை அறியாமல் வெளுத்துக் கட்டுகிறோம். அசைவ உணவுகளை மட்டும் அளந்து சாப்பிடுவோமா என்ன? நம்முடைய முந்தைய தலைமுறையினர் சிக்கனோ, மட்டனோ எவ்வளவு சாப்பிட்டார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
ஒரு குடும்பத்திற்கே ஒரு கிலோ அல்லது அரை கிலோ கறி எடுத்து சமைத்துச் சாப்பிடுவார்கள். ஆனால் இன்று - ஒரு தனிநபர் வேறு வகை உணவுகள் எதையும் சாப்பிடாமல் சிக்கனை மட்டுமே அரை கிலோ, ஒரு கிலோ என்று சாப்பிடும் கலாசாரம் வந்து விட்டது. ஒரே ஒரு சோற்றுப் பருக்கையோ, காய்கறியோகூட இல்லாமல், வெறும் சிக்கனை மட்டுமே மெயின் உணவாகத் தரும் ஹோட்டல்கள் நம் ஊர்களிலும் வந்துவிட்ட காலம் இது!
மூன்றாவது பிரச்னை - பிராய்லர் சிக்கன் வளர்க்கப்படும் முறை. குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டவைதான் இந்த பிராய்லர் கோழிகள். அதன் வாழ்நாள் முடிந்து செத்துப் போவதற்குள் பிராய்லர் சிக்கனை சாப்பிட்டு விட வேண்டும். அதே போல பண்ணையில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான கோழிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் வளர்ந்து கொழு கொழு என்று எடை கூடுதலாகியும் விட வேண்டும்.
அப்போதுதான் லாபம் இருக்கும். குறுகிய ஆயுள் கொண்ட பிராய்லர் கோழிகளை செத்துப் போவதற்குள் எடை கூடுதலாக வளர்த்து, செத்துப் போவதற்குள் விற்றும் விட வேண்டும். வேகமான வளர்ச்சிக்காக இரவு நேரங்களிலும் பல்புகளை எரிய விட்டு சாப்பிட வைத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி வளர்க்கப்பட்ட எடையும் போதாமல் பிராய்லர் கோழிகளுக்காகவே தனியான சத்து மருந்துகளையும், ஊசிகளையும் பயன்படுத்தத் துவங்கினார்கள்.
அதன் உச்சம்தான், பிராய்லர் கோழிகளின் கூடுதல் வளர்ச்சிக்காக இப்போது பயன்படுத்தப்படும் ஹார்மோன் ஊசிகள். மனிதர்களுக்கு ஹார்மோன் ஊசிகளைப் பயன்படுத்தினாலே பல்வேறு விபரீத விளைவுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இந்த நிலையில் குறுகிய ஆயுள் கொண்ட சிறிய கோழிகளுக்கு ஹார்மோன்களை செலுத்துவதன் மூலம், அதன் உடல் முழுவதும் ஹார்மோன்களின் பாதிப்புகள் பரவி விடுகின்றன. அந்த இறைச்சியைத் தொடர்ந்து உண்ணும் மனிதனின் உடலிலும் அந்த பாதிப்புகள் ஏற்படுவது தொடர்கிறது.
கோழிகளுக்கு ஏற்றப்பட்ட ஹார்மோன் ஊசிகளால் கோழிகள் பாதிக்கப்படும் என்று கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். அதெப்படி அதை உண்ணும் மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள்? ரசாயன மருந்துகள் மற்றும் ஊசிகளால் ஏற்படும் பாதிப்புகள் கோழியின் உடலில்தானே இருக்கும்? பிராய்லர் கோழி பற்றிய சமீபத்திய ஆய்வு ஒன்று உங்களுக்கு பதில் சொல்லும்.
டெல்லியில் இயங்கும் சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட் நிறுவனம், தன்னுடைய அங்கமான பொல்யூஷன் மானிட்டரிங் லேபராட்டரி மூலமாக பிராய்லர் சிக்கன் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்விற்காக பிராய்லர் கோழியின் கறியும், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஏதோ ஒரு இடத்தில், ஒரே ஒரு கோழியில் செய்யப்பட்ட ஆய்வு அல்ல இது. டெல்லி, நொய்டா, குர்கான், பரிதாபாத் மற்றும் காஜியாபாத் என ஐந்து நகரங்களில் பிராய்லர் கோழிகளிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் என்ன கண்டுபிடித்தார்கள் தெரியுமா? கோழியின் வளர்ச்சிக்காகச் செலுத்தப்பட்ட ஆன்ட்டி பயாட்டிக் ரசாயனங்கள் கோழியின் கறியிலும், கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் தேங்கியிருந்தன என்பதைத்தான். ஆய்வுக்கு எடுக்கப்பட்டவற்றில் 40% கோழிகளில் பலவகை ஆன்ட்டி பயாடிக் கலப்பும், 22.9% கோழிகளில் இரு ஆன்ட்டி பயாட்டிக்குகளும், 17.1 % கோழிகளில் ஒரு ஆன்ட்டி பயாட்டிக் ரசாயனமும் கலந்திருப்பது தெரிய வந்தது. ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படும் ஆன்ட்டி பயாடிக் ரசாயனங்களைக் கலந்து கொடுப்பது கோழிகளுக்கு வேண்டுமானால் வளர்ச்சியைத் தரலாம்.
ஆனால் மனிதர்களுக்கு நோய்களைத்தானே தரும்?பிராய்லர் சிக்கனை இயற்கை ஆர்வலர்களும், மருத்துவர்களும் எதிர்ப்பதற்கு இதனை விட வேறு என்ன காரணம் வேண்டும்?இன்னும் சில உணவுகளைப் பார்த்து விட்டு, ‘மிகவும் நல்லது’ என்று எல்லாராலும் பரிந்துரைக்கப்படும் பழங்கள் பற்றிப் பார்க்கலாம்.
ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படும் ஆன்ட்டிபயாடிக் ரசாயனங்களைக் கலந்து கொடுப்பது கோழிகளுக்கு வேண்டுமானால்
வளர்ச்சியைத் தரலாம். ஆனால் மனிதர்களுக்கு நோய்களைத்தானே தரும்?
No comments:
Post a Comment