May 24, 2015

'குடிநீரில் கலப்படம் செய்தால் கடும் சிறை தண்டனை'

தஞ்சாவூர்: ''குடிநீரில் கலப்படம் செய்தால், சிறை தண்டனை அளிக்க வசதியாக, விரைவில், புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது,'' என, மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.
தஞ்சாவூரில், இந்திய உணவுக் கழக மாவட்ட அலுவலகம் மற்றும் உணவு பூங்கா அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. இதில், பஸ்வான் பேசியதாவது: நாட்டிலுள்ள உணவு தானிய கிடங்குகளில், 60 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு, உணவு தானியங்களை சேமித்து வைக்க வசதியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கையால், கிடங்குகளில் வீணாகும் தானியங்களின் அளவு, 4 சதவீதத்தில் இருந்து, 0.044 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூலம், பொது வினியோக திட்டத்திக்கு வழங்கும் பொருட்கள் தரமானதாக உள்ளன. ஆனால், மாநில அரசு, தரமில்லாத பொருட்களை கொள்முதல் செய்வதால், ரேஷன் கடையில் வினியோகிக்கும் பொருட்களில் குறைபாடு ஏற்படுகிறது. குடிநீரில் கலப்படம் செய்தால், சிறை தண்டனை அளிப்பதற்கு வசதியாக, விரைவில், புதிய சட்டம் கொண்டுவரப்படும். இந்த சட்ட மூலம், வழக்கு தொடுத்தவர் மட்டுமல்லாது, குடிநீரை அருந்துவதால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment