தர்மபுரி, ஏப்.8:
தர்மபுரியில் மாம்பழங்களை செயற்கை பழுக்க வைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு, தர நிர்ணய சட்டம் மற்றும் உரிமம் பெறுவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் தலைமை வகித்து பேசியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் பாதுகாப்பான, தரமான கலப்படம் இல்லாத உணவு பொருட்களை விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். இருதய நோய், புற்றுநோய் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய செயற்கை நிறங்களை பயன்படுத்தக்கூடாது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது.
கோடை காலங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர், குளிர்பானங்களில் செயற்கை நிறங்கள், சாக்ரீன்களை சேர்க்க கூடாது. மாம்பழங்களில் கார்பைடு கல் வைத்து, செயற்கையாக பழுக்க வைக்கக்கூடாது. காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவேண்டும்.
உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் மட்டும் அடைத்து விற்பனை செய்ய வேண்டும். அடைக்கப்பட்ட பொருட்களில் தயாரிக்கப்பட்ட தேதி, விலை, காலாவதி தேதி, சத்துகள் விபரம், குறியீடுகள், தயாரிப்பாளர் முகவரி உள்ளிட்ட 8 அம்சங்கள் லேபிளில் இருக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் தினேஷ் பேசினார்.
கூட்டத்தில், லைசென்ஸ் பெறுவது குறித்தும் உணவு பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோபிநாத், சேகர், சிவமணி, குமணன், நந்தகோபால், நகர வர்த்தகர் சங்க தலைவர் உத்தண்டி, செயலாளர் நாகராஜன், தங்கவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
How to find out chemical treated Mangoes - Video http://wp.me/p2HDZg-5QE
ReplyDelete