ஓமலூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருள்களை கைப்பற்றி அழித்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் உள்ள கடைகளில் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமனஅலுவலர் டி.அனுராதா தலைமையிலான குழுவினர் பேருந்து நிலையம், அதனைச் சுற்றியுள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு விடுதிகள், சிற்றுண்டிகள், குளிர்பான நிலையங்கள், பழக்கடை, பலகார கடைகளில் இந்த ஆய்வுகள் நடைபெற்றன. உணவு விடுதி, சிற்றுண்டிகளில் இரு நாள்கள் பழைமையான இறைச்சிகளைப் பதப்படுத்தி விற்பனை செய்வதும், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பழைய எண்ணெய் மூலம் உணவுப் பண்டங்கள் தயாரிப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அனைத்தையும் பறிமுதல் செய்து அவர்கள் முன்னிலையிலேயே அழித்தனர்.
இதைத் தொடர்ந்து, குளிர்பான கடைகளில், வைக்கப்பட்டிருந்த காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும், கார்பைடு கல்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், அழுகிய நிலையில் இருந்த பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், பேருந்து நிலையப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அடங்கிய இரண்டு மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மக்கள் உடல் நலத்திற்கும், உயிருக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment