சேலம், ஏப். 2:
தமிழகத்தின் சராசரி வெப்பநிலையே 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்று சொல்லும் அளவுக்கு, மார்ச் கடைசி வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக, ‘ஜில்’ என்ற பழச்சாறு, ஐஸ் கிரீம், கரும்பு ஜூஸ் கடைகளை தேடி மக்கள் நாடிச் செல்கின்றனர்.
கோடை துவங்கியதையடுத்து, தமிழகம் முழுவதும் போலி மற்றும் காலாவதியான குடிநீர், குளிர் பானம் விற்பனை ஜோராக நடக்கும். அதனை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும் பணியில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆத்தூர், மகுடஞ்சாவடி, தலைவாசல், ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பே காலாவதியான 7500 குளிர்பானம் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதை தொடர்ந்து தற்போது, கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள்தான் இந்த சீசனில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய உணவுப்பொருள். அதற்கு காரணம், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயு. ‘‘இந்த வாயுவின் மூலம் மா, வாழை போன்றவை 12முதல்24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் அவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும். எனினும், அவசர அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில் வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர்,’’ என்கிறனர், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
இதுபோன்று செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர் ந்து உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பை யும் பாதிக்கும். குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஏற்படலாம் என்றும் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் அனுராதா எச்சரிக்கிறார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதால் காலாவதியான குளிர்பானங்களை கொடுத்தாலும் குடித்து விட்டு சென்று விடுவார்கள் என்ற எண்ணம் எல்லா பஸ் நிலைய கடைக்காரர்கள் மத்தியிலும் நிலவுகிறது. அதனால்தான் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முதலில் பஸ் நிலைய கடைகளை குறி வைத்து களம் இறங்கியுள்ளனர். இவர்களின் வேட்டையில் பல காபி பார், பேக்கரி கடைக்காரர்கள் சிக்கிக்கொண்டாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் போலி மற்றும் காலாவதி பொருட்களிடம் இருந்து தப்பிக்க முடியும் என்பதும் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
‘கார்பைடு’ பழம் கண்டறிவது எப்படி?
கார்பைடு கற்கள், வெல்டிங் பட்டறைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கற்களில் உள்ள அசிட்டிலீன் வாயு மூலம் பழங்கள் மிக விரைவாக செயற்கையாக பழுக்க வைக்கப்படுகிறது. பொதுவாக செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாக இருக்கும். தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தோலை நீக்கி பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டறிய முடியும்.
ஐஎஸ்ஐ முத்திரை கட்டாயம்
பாலிதீன் பாக்கெட் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீருக்கு, கண்டிப்பாக ஐஎஸ்ஐ முத்திரை பெற்றிருக்க வேண்டும். ஹெர்பல் மற்றும் பிளேவர்டு வாட்டர் என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களில் ஐஎஸ்ஐ முத்திரை இருப்பதில்லை. குடிநீர் பாட்டில் வாங்கும்போது அதில் ஐஎஸ்ஐ முத்திரை, இந்த முத்திரைக்கு மேல் பகுதியில் ஐஎஸ் எண், முத்திரைக்கு கீழ் பகுதியில் சிஎம்/எல் எண்கள் இருக்க வேண்டும். அதன்பின், பாட்டிலில் அடைக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி விவரங்கள் ஆகிய அம்சங்களை பார்த்து நுகர்வோர் வாங்க வேண்டும்.
No comments:
Post a Comment