தாம்பரம்: மாம்பழ சீசன் தொடங்க உள்ள நிலையில், தரமற்ற முறையில் மாங்காய்களை கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருவதால் தடுத்து நிறுத்த கோரிக்கை எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் மாம்பழ சீசனாக உள்ளது. கடைகளுக்கு சப்பட்டை, கிளி மூக்கு, பஞ்சவர்ணம், கொட்டக்காய், அல்போன்சா உள்பட பல வகையான மாங்காய்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. இந்நிலையில், சீசன் தொடங்கும் முன்பே சில வியாபாரிகள் அதிக லாபம் பார்க்கும் நோக்கத்தில், மாங்காய்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து, கடைகளில் குவியலாக வைத்து அவற்றை கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளனர். கோயம்பேடு, தாம்பரம், தி.நகர், சைதாப்பேட்டை, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பெரிய மார்க்கெட்டுகள் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் உள்ள சிறிய கடைகளிலும் தற்போது, இதுபோன்று முறைகேடாக மாங்காய்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு பழுக்கும் பழங்களின் தோல்பகுதி பளபளப்பாக இருக்கும்.
இது பார்ப்பவர்களை வாங்க தூண்டும். இதேபோல், குவியலாக மாங்காய்களை போட்டு, ஸ்பிரே மூலம் ரசாயன மருந்து அடிக்கப்படுகிறது. கல், ரசாயனம் மூலம் காய்கள் சில நாள்களில் பழுக்கின்றன. இந்த பழங்களை சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு சீசனில் உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள், பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை செய்து, செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை டன் கணக்கில் பறிமுதல் செய்து அழித்தனர். கடைகளில் இருந்த கார்பைட் கல், ரசாயன மருந்துகளை கைப்பற்றினர். அதேபோல், இந்தாண்டும் உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்கி, செயற்கை முறையில் மாங்காய்களை பழுக்க வைத்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
No comments:
Post a Comment