நம் தாத்தா காலத்தில் கோடியில் ஒருவருக்கு இருந்தது புற்றுநோய். பிறகு, லட்சங்களில் ஒருவர் என்பதைத் தாண்டி, ஆயிரங்களை அசால்டாக ஓவர்டேக் செய்து விட்டது தற்போது. நூற்றுக்கு ஒருவர் புற்றுநோயாளி ஆகும் நிலை வெகுதூரம் இல்லை என அச்சமூட்டுகின்றன ஆய்வுகள். எங்கோ ஒருவருக்கு எப்போதோ வந்த புற்றுநோய், இன்று மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலாக மாறிப்போன காரணியைத் தேடிப்போனால், அது நாம் தினமும் உண்ணும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களைத் தொட்டுநிற்கிறது. ஆக, இது நமக்கு நாமே வைத்துக் கொண்டிருக்கும் ஆப்பு.
'ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற மகத்தான கொள்கையை அடிப்படையாகக்கொண்ட, நமது பண்டைய வேளாண்முறைகளைக் கைவிட்டு, அதிக விளைச்சல் என்ற இலக்குக்காக, நாம் ஒட்டுமொத்த சூழலையும் இழந்து நிற்கிறோம். பயன்பாட்டு சுழற்சி அடிப்படையிலான நமது வேளாண்முறை, ஆரோக்கியத்தை அள்ளித்தந்தது. ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில், ரசாயனப் பயன்பாடு அதிகமான பிறகு, வரமே சாபமான கதையாக, மனித குலம் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான விவசாயமே அழிவுக்கும் காரணமாக அமைந்துவிட்டது.
ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தொடர் பயன்பாட்டால், பூச்சிகள் வீரியத்தன்மை பெற்றுவிட்டன. அதை சமாளிப்பதற்காக, தாறுமாறாக விஷத்தைத் தெளித்து, காய்கறிகளை விளைவிக்கிறார்கள். விளைவு, காய்கறிகள் மட்டுமல்லாது, மண்ணும் நீரும்கூட நஞ்சாக மாறிக்கிடக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை தெளிவான விவசாயக் கொள்கை இல்லாததன் விளைவு, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட, பல பூச்சிக்கொல்லிகள் இன்றைக்கும் நம் நாட்டில் பயன்பாட்டில் இருக்கின்றன.
பொதுவாக, காய்கறிகளில் பூச்சிக்கொல்லி தெளித்து, 23 நாட்கள் கழித்துத்தான், சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இன்றைக்கு அறுவடைக்கு முதல் நாள் வரை காய்கறிகள் மீது மருந்து தெளிக்கப்படுகிறது. முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற சில காய்கறிகள், அறுவடையான பிறகும் ரசாயனத்தில் நனைந்தே சந்தைக்கு வருகின்றன. பழங்களில், திராட்சை, காய்கறிகளில், முட்டைக் கோஸ், காலிஃப்ளவர், கத்தரி ஆகியவற்றில்தான் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்படிப்பட்ட ரசாயனக் காய்கறிகளை உண்பதால், பாதிப்பு வருமா? நிச்சயம் வரும் என்கிறார் மதுரை 'அப்போலோ மருத்துவமனை’ 'சிறுநீரகவியல்’ தலைமை மருத்துவர் சௌந்தரபாண்டியன்.
- 'புற்றுநோய்க்கான முக்கிய காரணிகள், இந்த ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும்தான். இதை ஏராளமான ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன. இப்போது நியோநிகோடினாய்ட் (Neonicotinoid) என்ற ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லி மருந்து, காய்கள் மற்றும் பழங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது, மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது. காய்கறி, பழங்களைச் சமைப்பதற்கு முன்பு கழுவினாலும், ஏற்கனவே உள்ளே சென்ற ரசாயனம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அல்சைமர், ஞாபகமறதி, குழந்தையின்மை போன்ற பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.
நன்கு விளைய ரசாயன உரம், பூச்சிகள் தாக்குதலை சமாளிக்கப் பூச்சி மருந்து என்பதைத் தாண்டி, பழங்களைப் பழுக்கவைக்கவும் பதப்படுத்தவும்கூட அதிக அளவு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகையக் காய்கறி பழங்களைத்தான் நாம் வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதனால்தான், நோயாளிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துவருகிறது.''
'காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாதே. இதற்கு என்னதான் மாற்று?'
'ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை வழி விவசாயத்தில் விளையும் காய்கறி, பழங்களைப் பயன்படுத்துவதுதான் இதற்கான ஒரே மாற்று.' என்கிறார் சௌந்தரபாண்டியன்.
'ரீஸ்டோர்’ என்ற பெயரில் இயற்கை விவசாய முறையில் விளையும் பொருட்களைச் சந்தைப் படுத்திவரும், அனந்துவிடம் கேட்டோம்.
'விஷ உணவுகளில் இருந்து நம்மை எப்படித்தான் தற்காத்துக் கொள்வது?'
''இதற்கு முதல் தீர்வு, நமக்குத் தேவையானவற்றை வீடுகளிலேயே விளைவித்துக்கொள்வதுதான். வீடுகளில் தோட்டங்கள் அமைக்கும் முறை, சமீப காலமாக அதிகரித்துவருவது ஆரோக்கியமான மாற்றம். மொட்டை மாடிகளில் வீட்டின் அருகே இருக்கும் காலி இடங்களில், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை இயற்கை இடுபொருட்களைக் கொண்டே விளைவித்துக் கொள்ள முடியும். மொட்டைமாடியில் பப்பாளியைக்கூட விளைவிக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்களே ஆர்வமுடன் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும்போது, மற்ற பகுதிகளில் உள்ளவர்களாலும் அமைக்க முடியும். இதற்கு முதல் தேவை ஆர்வமும் உழைப்பும்தான்.
இரண்டாவது, இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளைத் தேடி வாங்குவது. இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத்தான் வாங்குவோம் என நுகர்வோர் முடிவு செய்தால், உற்பத்தியாளர்களும் அதை உற்பத்தி செய்துதானே ஆக வேண்டும். இதையும் தாண்டி, 'கிடைப்பதை வாங்கி உண்போம்.’ என்ற மனநிலையில் இருப்பவர்கள், சின்னதாக ஓட்டை, இலை வாடிக்கிடக்கும் காய்கறி, பழங்களை வாங்கிப் பயன்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள். சின்ன புழு உயிர் வாழக்கூடிய காய்கறிகளில், நிச்சயம் பெரிய அளவில் நஞ்சு இருக்காது. எனவே, அதைத் தைரியமாக வாங்கி, புழு உள்ள அல்லது ஓட்டையாக இருக்கும் பகுதியை வெட்டிவிட்டு மற்ற பகுதியைப் பயன்படுத்தலாம்'' என்றார்.
ஆர். குமரேசன்,படங்கள்: வீ.சிவகுமார்
விஷத்தை முறிக்கலாம்!
'எல்லாம் சரி, ஆபீஸ் போற அவசரத்துல கிடைக்குறதை சமைச்சு, சாப்பிடும் நடுத்தர மக்கள் என்ன செய்வது. உடலுக்குக் கெடுதினு தெரியுது. ஆனா, இயற்கை அங்காடிகளைத் தேடி போக முடியலையே'' என அலுத்துக் கொள்பவர்களுக்கும் ஒரு தீர்வைச் சொல்கிறது திருவனந்தபுரத்தில் உள்ள கேரள விவசாய பல்கலைக்கழகம். சிறிது புளியை எடுத்துக் கரைத்து, அந்த தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் காய்கறி, பழங்களில் உள்ள ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் 95 சதவிகிதம் நீங்கி விடும். பீன்ஸ், பாவக்காய் போன்ற காய்கறிகளை இரண்டு முறை கழுவ வேண்டும்.
சீசன் பழங்களே சிறந்தது!
சொரசொரப்பான தோல்கொண்ட பழங்கள் அதிகம் ரசாயனப் பயன்பாடு அற்றதாக இருக்கும். ஆப்பிளை வாங்கியதும் சுடுநீரில் சிறிது நேரம் ஊறவைத்தோ அல்லது தோலை சீவிவிட்டோ உண்பதுதான் நல்லது. கூடுமானவரை பதப்படுத்தப்பட்ட பழங்களைப் பயன்படுத்தும் முன்பாக, வெதுவெதுப்பான நீரில் கழுவிய பிறகு, பயன்படுத்தினால் பெரும் பாதிப்புகளில் இருந்து தப்பலாம். இதையெல்லாம்விட, அதிக விலை கொடுத்து, பதப்படுத்தப்பட்ட பழங்களை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை மட்டுமே சாப்பிடப் பழகுவோம்.
No comments:
Post a Comment