கோவை, மார்ச்.19:
கோவை தாமஸ் வீதி பகுதிகளில் உள்ள குடோன்களில் புகையிலை பொருட்கள் தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 850 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பான்பராக், குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், குடோன்களில் கிலோ கணக்கில் புகையிலைகளை வியாபாரிகள் பதுக்கிவைத்துள்ளதாகவும் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜெரால்டு, சுருளி ஆகியோர் அடங்கிய குழுவினர் கோவை தாமஸ் வீதி பகுதியில் உள்ள குடோன்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கல்கத்தா பான் ஹவுஸ் குடோனில் 500கிலோ, மீனாட்சி குடோனில் 350கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து புகையிலை பொருட்கள் அனைத்தையும் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சுமார் 1.5 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கல்கத்தா பான் ஹவுஸ் குடோனை சீல் வைத்தனர்.
இது குறித்து நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில் கோவையில் புகையிலை விற்பனை அதிகரித்துள்ளதாக தொடர் புகார் வந்தது. இதன் அடிப்படையில் குடோன்களில் ரெய்டு நடத்தினோம்.
இந்த ரெய்டில் இரண்டு குடோன்களில் இருந்து 850 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். ஒரு கடையை சீல் வைத்துள்ளோம். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள குடோன்களிலும், பெட்டிகடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment