சேலம், பிப்.6-
ஜவ்வரிசி ஆலைகளுக்கு மறைமுகமாக திராவகம் உள்ளிட்ட ரசாயன பொருட்களை விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி புகார் தெரிவித்துள்ளனர்.
கலப்படம்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில், ஜவ்வரிசி வெண்மை நிறத்திற்காக ரசாயன பொருட்கள் கலப்பதாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஜவ்வரிசி ஆலைகளில் சோதனை நடத்தினர். அப்போது, கலப்படம் செய்த ஜவ்வரிசி ஆலைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
இதை கண்டித்து ஜவ்வரிசி வியாபாரிகள் ஏலம் எடுப்பதை புறக்கணித்தனர். இதனால் லட்சக்கணக்கில் ஜவ்வரிசி தேக்கம் அடைந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
திராவக கடைகள்
இந்த நிலையில், வட மாநிலங்களில் ஜவ்வரிசி சீசன் தொடங்கி உள்ளதால் தற்போது மீண்டும் ஆலைகளில் ரசாயனம் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. சேலத்தில் 32 கடைகள் உரிமத்துடன் ரசாயன பொருட்கள் விற்பனை செய்து வருகின்றன. இவர்கள் யாருக்கு எல்லாம் ரசாயன பொருட்கள் வழங்கி உள்ளார்கள் என்பதை எழுதி வைக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.
ஆனால் சிலர் விதிமுறைகளை மீறி ஜவ்வரிசி ஆலைகளுக்கு மறைமுகமாக திராவகம் உள்ளிட்ட ரசாயன பொருட்களை விநியோகம் செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரி மறைமுகமாக ஆலைகளுக்கு திராவகம் விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment