Dec 26, 2014

மெல்ல கொல்லும் கலப்படம்

உணவுப் பொருட்களும் கலப்படமும் ஒன் றோடு ஒன்று ஒட்டி பிறந்தவை என்பதை சேலத்தில் நடந்துள்ள சோதனை மீண்டும் ஒரு முறை உணர்த்தி உள்ளது. தனியார் நிறுவன கிடங்கியில் சோம்பு, சீரகம், மிளகு உள்ளிட்டவை கலப்படம் செய்து விற்பனைக்கு அனுப்பப்பட இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து, 500 மூட்டை மசாலா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ஒரு காலத்தில் அரிசியில் கல் கலப்பதே பயங்கர கலப்படமாக கருதப்பட்டது. இன்றோ ஒரு தானியத்தை கூட விட்டுவைக்கவில்லை. குடிநீர், பால் என அனைத்திலும் கலப்படம்தான். கலப்பட உணவு பொருட்களை சாப்பிடும் அப்பாவி மக்கள் பலவித நோய்களுக்கு ஆளாகும் அவலம் தொடர்கிறது.
சோம்பில் கூடுதல் நிறம் கிடைக்க பச்சை நிற ரசாயன பவுடர், மிளகில் பப்பாளி விதைகள், சீரகம் மற்றும் கடுகில் அதே போன்று பொருட்களை கலந்திருப்பதும், வெந்தயத்தில் வெள்ளை நிற ரசாயன பவுடரை பயன்படுத்தி கூடுதல் நிறமேற்றியதும் சேலத்தில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மசாலா பொருட்கள் மட்டுமல்லாது, சமையல் எண்ணெய், வெண்ணெய், நெய், வனஸ்பதி, இனிப்பு வகைகள், பருப்பு வகைகளில் அதிகம் கலப்படம் நடக்கிறது. 2013&14ம் ஆண்டில் நாடு முழுவதும் 72,200 உணவு பொருள் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், 13,571 மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரே கூறியிருக்கிறார். இது தொடர்பாக 10,325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரசாயன பொருட்கள் கலப்படத்தால், உடலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. வயிற்று வலி, அல்சரில் தொடங்கி புற்றுநோய் வரை ஏற்படும். மனிதர்களை மெல்ல கொல்லும் விஷத்தை உணவில் கலப்படம் செய்பவர்கள் கொலைகாரர்கள்தான். அவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
ஆனால், உணவு பொருள் பாதுகாப்பு சட்டத்தை மாநில அரசுகள் ஒழுங்காக அமல்படுத்தாததே இதற்கு காரணம் என்று கூறி, மத்திய அமைச்சர் நழுவ முயற்சித்துள்ளார். அதே நேரத்தில் கலப்படத்தை தடுக்கும் வழிமுறைகளை வகுக்க உயர்மட்ட குழு ஒன்றையும் அரசு அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து விழிப்புடன் செயல்பட்டு கலப்பட பேர்வழிகளை ஒடுக்க வேண்டும். இது மக்களின் உயிரோடு விளையாடும் விஷயம் என்பதால், சுணக்கம் காட்டாமல், பொறுப்பை தட்டிக்கழிக்காமல் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லது.

No comments:

Post a Comment