நாமக்கல்: ரசாயனம் கலந்த ஜவ்வரிசிக்கு, வெளி மாநிலங்களில் வரவேற்பு உள்ளதால், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவ்வரிசி, ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஏராளமான சேகோ, ஸ்டார்ச் ஆலைகள் இயங்கி வருகிறது.
வடமாநிலத்தில் வரவேற்பு:
இங்கிருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு, வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் மூலம் சேமியா, சிப்ஸ் உள்ளிட்ட, 64 வகையான உணவு பொருள் தயார் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ஈரப்பதமான ஸ்டார்ச் விற்பனை செய்யவும், மற்றும் ரசாயனம் கலந்த ஜவ்வரிசியை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் தடை விதிக்க, இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இரண்டு மாதத்துக்கு முன், இயற்கை முறையில் உற்பத்தி செய்த ஜவ்வரிசிக்கு, வடமாநிலங்களில் வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம், வரலாறு காணாத விலை ஏற்றம் பெற்று, 90 கிலோ கொண்ட மூட்டை, 7,335 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சேலத்தில் உள்ள ஜவ்வரிசி வியாபாரிகள், ரசாயன ஜவ்வரிசியை ஊக்குவிப்பதால், இயற்கையான ஜவ்வரிசியை வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீழ்ச்சி அடையும்:
இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியதாவது: ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் அரசு அதிகாரிகளுக்கும், அரசு சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படுவதா அல்லது வியாபாரிகள் கட்டளைக்கு கட்டுப்பட்டு ரசாயனம் கலந்த ஜவ்வரிசிரி உற்பத்தி செய்வதா என தெரியாமல், 75 சதவீதம் ஆலைகள் இயங்காத நிலையில் உள்ளன. இதனால், அறுவடைக்கு தயாராக உள்ள, பல லட்சக்கணக்கான ஹெக்டர் மரவள்ளிக்கிழங்கை கொள்முதல் செய்ய ஆள் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் மரவள்ளி விலை படுவீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது. ஜவ்வரிசி வியாபாரிகள், கொள்முதலை புறக்கணிப்பதாக கூறி, ஆலைகளில் இருந்து, நேரடியாக ரசாயனம் கலந்த வெள்ளை நிற ஜவ்வரிசியை மட்டும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பியதால், தற்போது மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில், ரசாயனம் கலந்தாலும், வெண்மை நிற ஜவ்வரிசி கேட்கின்றனர்.
மூட்டைகள் தேக்கம்:
அதனால், இயற்கை முறையில் தயாரித்த பழுப்புநிற ஜவ்வரிசியை வாங்க ஆளில்லாமல், 1,000ம் கணக்கான மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, மரவள்ளி விவசாயிகளையும், இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இயற்கை ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் நலன் காக்க வேண்டும்
ReplyDelete