Oct 31, 2014

செவ்வாய்பேட்டைக்கு வெல்லம் வரத்து பாதிப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்



சேலம், அக்.31:
சேலம் செவ்வாய்பேட்டை வெல்ல மண்டிக்கு வெல்லம் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தேக்கம்பட்டி, வட்டக்காடு, கருப்பூர், மூங்கில்பாடி, காமலாபுரம், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை விவசாயிகள் செவ்வாய்பேட்டை வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு வரும் வெல்லத்தை வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வெல்லம் தயாரிப்பில் கலப்படம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சேலம் மாவட்டத்தில் பல ஆலைகள் இயங்காததால், வெல்லம் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வெல்லம் வியாபாரிகள் கூறியதாவது:
சேலம் செவ்வாய்பேட்டையில் தினசரி காலையில் நடக்கும் வெல்ல ஏல மண்டியில் 120 முதல் 150 டன் வெல்லம் விற்பனை நடக்கும். கடந்த செப்டம்பரில் சேலம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின்போது வெல்லத்தில் கலப்படம் இருப்பது தெரியவந்தது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் கெடுபிடியால், சேலம் மாவட்டத்தில் வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் பல இயங்கவில்லை. வெல்லம் உற்பத்தி குறைந்ததால், சேலம் செவ்வாய்பேட்டை வெல்லம் மண்டிக்கு வெல்லம் வரத்து பாதித்துள்ளது.
தற்போது 30 முதல் 40 டன் வெல்லம் மட்டுமே வருகிறது. இவைகளும் வந்தவுடன் விற்பனைக்கு சென்றுவிடுகிறது. பல மளிகைக்கடைகளில் வெல்லம் விற்பனைக்கு இல்லை. வரத்து குறைந்ததால் வெல்லத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று நிலவரப்படி 31 கிலோ கொண்ட சிப்பம் முதல் ரக வெல்லம் ரூ.1000 முதல் ரூ.1200 எனவும், இரண்டாம் ரகம் ரூ.850 முதல் ரூ.1000 என விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வெல்லம் வியாபாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment