Sep 9, 2014

உணவு பாதுகாப்புத்துறை கெடுபிடியால் ஆயிரம் டன் வெல்லம் உற்பத்தி நிறுத்தம்


சேலம், செப்.7:
சேலத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் கெடுபிடியால் ஆயிரம் டன் வெல்லம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் முடங்கியுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் செவ்வாய்பேட்டையில் வெல்லம் ஏல மண்டி பல ஆண்டாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்டிகளுக்கு ஓமலூர், தேக்கம்பட்டி, வட்டக்காடு, கருப்பூர், மூங்கில்பாடி, காமலாபுரம், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் வெல்லத்தை இங்கு கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட வியாபாரிகள் இங்கு வந்து வெல்லத்தை வாங்கி செல்கின்றனர்.
இந்த மண்டியில் தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், செவ்வாய்பேட்டை பகுதி வெல்ல வியாபார கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் ஆய்வு நடத்தினர்.
அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெல்லத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட, அதிக ரசாயனம் கலந்துள்ளதாகவும், வெல்ல தயாரிப்பிற்கு சர்க்கரை பயன்படுத்தியிருப்பதாகவும் கூறி வெல்லத்தை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இதனால் கடந்த 28ம் தேதி நடைபெற இருந்த வெல்ல ஏலத்தில் வியாபாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
ஏலத்திற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 150 டன் வெல்லம் விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. அந்த வெல்லம் அனைத்தும் வாகனங்களிலேயே வைக்கப்பட்டன. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறையின் கெடுபிடியால், வெல்ல உற்பத்தியாளர்கள் வெல்ல உற்பத்தியை நிறுத்திவிட்டனர். ஒரு வாரமாக மண்டிக்கு ஏலத்திற்கு வெல்லம் வரவில்லை. இந்த வகையில் ஆயிரம் டன் வெல்ல உற்பத்தி தடைபட்டு, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வர்த்தகம் முடங்கியுள்ளது.
இது குறித்த வெல்ல மண்டி வியாபாரிகள் கூறுகையில், ‘‘சேலம் செவ்வாய்பேட்டையில் தினசரி காலையில் நடக்கும் வெல்ல ஏல மண்டியில் 150 முதல் 200 டன் வெல்லம் விற்பனை நடக்கும். கடந்த வாரத்தில் சேலம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மண்டிகளில் ஆய்வு நடத்தி, சோதனைக்காக வெல்ல மாதிரி எடுத்துச்சென்றார். வெல்லத்தில் கலப்படம் இருந்ததால், வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் கடந்த வாரத்தில் நடந்த ஏலத்தில் வியாபாரிகள் யாரும் பங்கேற்வில்லை. வியாபாரிகள் தரமுள்ள வெல்லத்தை விற்பனை செய்ய தயாராக உள்ளோம். அதற்கு உற்பத்தியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து வெல்ல உற்பத்தியாளர்கள் கூறியதாவது: காலங்காலமாக தற் போது உள்ள முறைகளின்படிதான் வெல்லம் தயாரித்து வருகிறோம். இது வரை எந்த பிரச்னையும் வரவில்லை. வெல்லம் உற்பத்தியில் ஒரு சிலர் எடை வரவேண்டும் என்பதற்காக சிறிதளவு அஸ்கா சர்க்கரை கலக்கின்றனர். இதனால் அனைத்து வெல்ல உற்பத்தியாளர்களும் பாதிக்கின்றனர். உணவுத்துறையின் கெடுபிடியால் வியாபாரிகள் வெல்லம் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால், ஒரு வாரத்தில் ஆயிரம்டன் வெல்ல உற்பத்தி நிறுத்தப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் வர்த்தகம் முடங்கியுள்ளது. இவ்வாறு வெல்ல உற்பத்தியாளர்கள் கூறினர்.
லட்சக்கணக்கில் வர்த்தகம் முடக்கம் விலையேறும் அபாயம்
கடந்த ஒரு வாரமாக வெல்ல உற்பத்தியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மண்டிக்கு வெல்லம் வரத்து இல்லை. இந்நிலையில் வரும் அக்டோபரில் ஆயுதபூஜை, அதைத் தொடர்ந்து தீபாவளி, பொங்கல் பண்டிகை வருகிறது. தற்போது உற்பத்தி நிறுத்தி இருப்பதால், ஆயுதபூஜை, தீபாவளிக்கு வெல்லத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் விலையேற வாய்ப்புள்ளது என்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

1 comment:

  1. Production stopped due to bad management practices . Action taken by TNFDA is appreciable and done in the interest of safe food to consumers.

    ReplyDelete