ராஜபாளையம், செப். 20&
ராஜபாளையம் பகுதியில் டீத்துளில் கலப்படம் செய்த விற்பனையாளர் மீது ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த டீத்தூளை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ள அதிர்ச்சி தகவலும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரிஜினல் டீத்துளுடன் கலப்பட துளை கலந்து பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு சட்ட அமல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று ஸ்ரீரெங்கபாளையம் பகுதியில் உள்ள குறிப்பட்ட வீட்டில் டீத்துள் பாக்கெட்களை சோதனை செய்தனர்.
அப்போது அதில் கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து டீத்துள் விற்பனையாளர் பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடமிருந்த பாக்கெட்களை பறிமுதல் செய்து திருநெல்வேலி உணவுக்கட்டுப்பாடு பகுப்பாய்வு சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். சோதனை அறிக்கையில் கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில், பழனிச்சாமி மீது நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். பறிமுதல் செய்த டீத்துளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இது குறித்து நகர உணவுப் பொருகள் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து கூறுகையில், அரசு அனுமதிக்கப்படாத புற்று நோய் வர காரணமாக உள்ள சாயங்கள் இந்த டீத்தூளில் கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment