Sep 20, 2014

குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பதாக மிரட்டல்

சேலம்: சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தொட்டியில், விஷம் கலப்பதாக, மர்ம நபர் ஒருவர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னங்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு, நேற்று முன்தினம், போஸ்ட் கார்டு கடிதம் வந்தது. அதில், "கொண்டப்பநாயக்கன்பட்டி, 4வது வார்டுக்கு உட்பட்ட, ஜீவா நகரில் உள்ள குடிநீர் தொட்டியில் விஷம் கலக்க உள்ளேன். என்னுடைய தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளனர். இந்துத்துவத்தை வேரோடு அழிப்பேன். எங்களுடைய ஆயுத பயிற்சிக்கு இடையூறாக இருந்த, 19 நாய்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளேன். அனுராதா, நீங்களும் என்னுடைய தொழிலுக்கு இடையூறு செய்துள்ளீர்கள். இப்படிக்கு, அல்லா முகம்மதுரபீக், சேலம் - 8' என, குறிப்பிடப்பட்டிருந்தது.கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்த, உணவு பாதுகாப்பு அலுவலர், கலெக்டர் மகரபூஷணத்திடம் அதை ஒப்படைத்தார். பின், சம்மந்தப்பட்ட, கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் தலைவர் பாபு, கன்னங்குறிச்சி போலீஸில் புகார் செய்தார். அதிகாரி அனுராதா, போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில், அந்த கடிதம் தொடர்பாக புகார் மனு அளித்தார்.கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதி மக்கள் கூறியதாவது:
எங்களுடைய பஞ்சாயத்துக்கு உட்பட்ட, ஜீவா நகர், விநாயகம்பட்டி உள்ளது. இந்த பகுதிகளில், சமீபத்தில், நாய்கள் இறந்துள்ளது உண்மை தான். ஜீவா நகரை ஒட்டியுள்ள கரட்டு பகுதியில், பல்வேறு குற்ற செயல் நடந்து வருகிறது. போலீஸார், இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். குடிநீர் தொட்டியில், வரும் வாரம், விஷம் கலப்பதாக கூறியுள்ள தகவல் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. உடனடியாக, அதிகாரிகளும், போலீஸாரும், அந்த கடிதம் எழுதிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


No comments:

Post a Comment